பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒத்துழைப்பு: இந்தியா-ஜப்பான் அறிவிப்பு

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதுகுறித்து, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாத வன்முறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பல்வேறு வடிவங்களிலும் தலைதூக்கி வரும் பயங்கரவாதம், உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஒப்புக்கொண்ட இருநாட்டுத் தலைவர்களும், சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும், பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ளாத கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் உறுதிபூண்டனர்.
அல்-காய்தா, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாட்டுப் பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாதத் தாக்குதல், 2016-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பதான்கோட் தாக்குதல் ஆகியவற்றுக்கு காரணமானவர்களை சட்டத்தின்முன் நிறுத்தும்படி பாகிஸ்தானை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும், பயிற்சி, ஆயுதங்கள், நிதி போன்ற பல்வேறு உதவிகளையும் அளிக்கப்படுவதற்கு எதிராக, உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானங்களின் அடிப்படையில் அனைத்து உறுப்பு நாடுகளும் அடையாளப்படுத்த வேண்டும் என்று மோடியும், ஷின்úஸா அபேவும் வலியுறுத்தினர் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com