அரசியல் நீதியை பண பலமும், வாரிசு அரசியலும் சீர்குலைக்கின்றன: உச்ச நீதிமன்ற நீதிபதி

அரசியல்சாசனத்தை வகுத்தவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் நீதியை பண பலமும், வம்ச வாரிசு அரசியலும் சீர்குலைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தெரிவித்தார்.

அரசியல்சாசனத்தை வகுத்தவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் நீதியை பண பலமும், வம்ச வாரிசு அரசியலும் சீர்குலைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நீதிபதி பி.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் பேசியதாவது:
இந்தியாவில் அரசியல் நீதி இல்லாதது வேதனையளிக்கிறது. அரசியல் அரங்கில் சமத்துவம், நீதி ஆகியவை குறித்துப் பார்த்தோமானால், முதல்கட்ட நடவடிக்கை சாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பேரரசுகளையும், குறுநில மன்னர்களின் ஆட்சிகளையும் நாம் அகற்றி விட்டோம். அதேவேளையில், ஜனநாயக தேர்தல் நடைமுறையில் பங்கேற்க நாட்டு மக்கள் அனைவரும் விருப்பம் கொள்ள முடியும் என்ற ரீதியில் அரசியல் நீதியை நாம் எந்த அளவுக்கு எட்டியுள்ளோம்?
அரசியல்சாசனத்தை வகுத்தவர்கள் உருவாக்கிய அரசியல் நீதி என்ற கோட்பாட்டை, தேர்தல் நடவடிக்கைகளில் பணபலம் ஆற்றும் பங்கானது சீர்குலைத்து விடுகிறது. இறுதியாக பணபலம்தான், சட்டமியற்றும் அமைப்பின் (நாடாளுமன்றம், சட்டப் பேரவை உள்ளிட்டவை) உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை நிர்ணயிக்கிறது. இந்த நிலைமையைக் கையாள்வது என்பது அடுத்த தலைமுறையினரைப் பொறுத்ததாகும். சிறந்த சமூகம், சிறந்த ஆட்சி, சிறந்த மக்கள் என்ற நோக்கில் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்.
நம் நாடு நீண்ட காலமாக சந்தித்து வரும் மற்றொரு அரசியல் அநீதியானது - வம்ச வாரிசு அரசியலாகும். யாராவது ஒருவர், சட்டமியற்றும் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக வந்து விட்டால் அவருக்குப் பின் அவரது மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோர் அப்பொறுப்பை வகிக்க வரிசைகட்டி நின்று விடுகிறார்கள். இதுவும் அரசியல் அநீதியின் மற்றொறு வடிவம்தான்.
அனைவருக்கும் அனைத்துப் பதவிகளுக்கும் வருவதற்கு தகுதி உள்ளது. அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒரு பதவியைப் பிடிப்பதை நிர்ணயிக்கும் சக்தி என்பது பொது வாழ்வில் உள்ள ஓர் அரசியல்வாதியின் சொந்தம் என்ற அம்சம் மட்டுமே என்ற நிலை உள்ளது.
நமது சமூகம் சந்தித்த பிரச்னைகள் குறித்து அரசியல்சாசனத்தை வகுத்தவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அவை தீர்க்கப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். சுதந்திரம் பெற்றதும், நம் நாடு உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது. 
எனினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைமை சீரானது. தீண்டாமை, பெண்களுக்கு சம உரிமை ஆகிய பிரச்னைகளைத் தீர்க்க அரசியல்சாசனத்தில் வழிவகை செய்யப்பட்டது. அந்த நிலைமை தற்போது மாறி வருகிறது என்றார் நீதிபதி ஜே.செலமேஸ்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com