தமிழகத்தில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார்

தமிழகத்தில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே.

தமிழகத்தில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே ஞாயிற்றுக்கிழமை (அக்.15) காலை ஆய்வு செய்தார்.
அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடன் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அரசு அதிகாரிகள், டாக்டர்களிடம் நோய் பாதிப்பு, சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். டெங்கு நோயின் தாக்கம், அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த கேட்டறிந்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது: தமிழக மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு நன்றாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் தொடர்பாக பரிசோதனை செய்து, முடிவுகள் அறிய நவீன கருவிகள் இங்கு உள்ளன. தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் ஆந்திரத்தில் இருந்தும் நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். 
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்து கொடுக்கப்படும். 
டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்துள்ள மத்தியக் குழு, தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 3 மாதத்தில் முடிவுகள் எடுக்கப்படும். இடம் தேர்வு செய்வது தொடர்பாக தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்தான் முடிவு செய்ய வேண்டும். 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடத்தப்படும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தரத்துக்கு மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 85 சதவீதமும், திருநெல்வேலி மற்றும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35 சதவீதமும், சேலம் மருத்துவக் கல்லூரியில் முழுவதுமாக தரம் உயர்த்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தரத்துக்கான அனைத்து துறைகளும் இந்த மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படுத்தப்படும். 
செங்கல்பட்டில் தடுப்பூசி வளாகம்: சுகாதாரத்துறையை 3 ஆண்டுகளாக மேம்படுத்தி வருகிறோம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ.650 கோடியில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 30 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படும். இந்தப் பணி 4 மாதத்தில் தொடங்கும் என்றார் அஸ்வினி குமார் சௌபே.
பேட்டியின் போது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் நாராயண பாபு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 
முதல்வருடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று, அவரை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே சந்தித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை மத்திய இணைஅமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com