பிரதமரின் வெளிநாட்டுப் பயணம்: பிரவீண் தொகாடியா தாக்கு

'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தருணத்தில், பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார்' என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா சாடியுள்ளார்.

'நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தருணத்தில், பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார்' என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா சாடியுள்ளார்.
முன்னதாக, விஹெச்பியின் புதிய சர்வதேச தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரவீண் தொகாடியாவின் ஆதரவாளரான ராகவா ரெட்டியை தோற்கடித்து, ஹிமாசல் முன்னாள் ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த தொகாடியா, 'மத்திய பாஜக அரசு, ஹிந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவும், அதைக் கண்டித்து, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை (ஏப்.17) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும்' கூறினார்.
இந்நிலையில், ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய அவர், 'இன்றைய சூழலில், நாட்டின் எல்லைகளில் ராணுவத்தினருக்கு பாதுகாப்பில்லை; விவசாயிகள் தற்கொலை முடிவை தேடிக் கொண்டிருக்கின்றனர். நமது மகள்களோ (சிறுமிகள்), வீட்டில்கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனர். இதுபோன்ற சூழலில் பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார்' என்றார். 
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா ஆகிய இடங்களில் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 'நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
தொகாடியாவுக்கு ஆதரவு: இதனிடையே, பிரவீண் தொகாடியாவுக்கு குஜராத் மாநில விஹெச்பி அமைப்பினர் ஆதரவாக உள்ளதாக, அந்த மாநில விஹெச்பி செய்தித் தொடர்பாளர் ஜே ஷா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'தொகாடியாவுக்கு ஆதரவாக, குஜராத்தில் விஹெச்பி அமைப்பின் பல்வேறு நிலைகளில் இருந்து சுமார் 5,000 பேர் விலகியுள்ளனர்' என்றார். குஜராத்தைச் சேர்ந்தவரான பிரவீண் தொகாடியா, அண்மைக்காலமாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com