ஒபாமா அரசின் விசா சலுகை ரத்து: இந்தியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் ஹெச்.1-பி நுழைவு இசைவு (விசா) சலுகை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்களும் (கணவன் அல்லது மனைவி) அங்கு பணிபுரியும் வகையில் வழங்கப்படும் ஹெச்-4 நுழைவு இசைவு

அமெரிக்காவில் ஹெச்.1-பி நுழைவு இசைவு (விசா) சலுகை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்களும் (கணவன் அல்லது மனைவி) அங்கு பணிபுரியும் வகையில் வழங்கப்படும் ஹெச்-4 நுழைவு இசைவு சலுகை ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முந்தைய ஒபாமா அரசு அளித்த இந்த சிறப்பு சலுகையை தற்போதைய டிரம்ப் அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதால் இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்தியர்கள் ஹெச்.1-பி நுழைவு இசைவு பெற்று பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தங்களது வாழ்க்கை துணைவர்களுக்கு ஹெச்-4 நுழைவு இசைவு பெற்று பயனடைந்து வருகின்றனர். 
சிறப்பு சலுகையான ஹெச்-4 நுழைவு இசைவை பயன்படுத்தி அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 71,000-ஐ தாண்டும். இதில், 90 சதவீதம் பயனாளர்கள் இந்தியர்கள் ஆவர். குறிப்பாக, இந்திய பயனாளர்களில் 93 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே ஹெச்-4 நுழைவு இசைவு முறை ரத்து செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஹெச்-4 நுழைவு இசைவை ரத்து செய்யும் அறிவிப்பை கோடை இறுதியில் எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறையின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
புதிய விதிகளை அறிமுகம் செய்யவும், புதிய வழிகாட்டுதல்களை வெளியிடவும், பழைய விதிகளை திருத்தம் செய்யவும், குடியேற்ற அமைப்பின் நிர்வாகத்தில் அமெரிக்க பணியாளர்களின் நலன்களை காக்கவும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது.
விதிமுறைகளை மாற்றியமைப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com