இடைநின்ற 17,590 மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கடந்த ஏப்ரல் மாதம் வரை, பள்ளியிலிருந்து இடை நின்ற 11 முதல் 14 வயது வரையிலான பெண்கள் 17,590 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் (வளர்ச்சித்துறை) இணை அமைச்சர்

கடந்த ஏப்ரல் மாதம் வரை, பள்ளியிலிருந்து இடை நின்ற 11 முதல் 14 வயது வரையிலான பெண்கள் 17,590 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் (வளர்ச்சித்துறை) இணை அமைச்சர் வீரேந்திர குமார் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
மேலும் அவர் கூறியதாவது: வளர் இளம் பெண்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சில மாணவிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. 
ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தினந்தோறும் ஊட்டச்சத்து, நுண் ஊட்டச்சத்துக்களை அரசு வழங்கி வருகிறது. 
போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணங்களால், பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து விடவும் அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது. 
அதன்படி 2018-19ஆம் ஆண்டில் மட்டும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 17,590 மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நடப்பு 2018-19ஆம் ஆண்டில், 5.9 லட்சம் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்தும், 1.97 லட்சம் பெண்களுக்கு  இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலச்சத்து மாத்திரைகளும், 1.67 லட்சம்  பேருக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.  
கிஷோரி சுகாதார அட்டைத்திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அங்கன்வாடி மையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டையில் அனைத்து விவரங்களும் குறிக்கப்படுவதால்  திட்டத்தின் செயல்பாட்டை அட்டையின் மூலம் அறிந்து கொள்ளலாம். திட்டம் தொடர்பான தகவல்களும், வழிகாட்டுதல்களும்  கல்வித்துறையின் ஆலோசனையின் பேரில் நடைபெறுவதால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆதரவுடன் சீராக நடைபெறுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com