ரஃபேல் விவகாரம்: ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரசார அரசியலுக்கு விழுந்த அடி என்றும்; இந்த விவகாரத்தில், நாட்டு மக்களிடமும் ராணுவத்தினரிடமும் அவ
ரஃபேல் விவகாரம்: ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா


ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரசார அரசியலுக்கு விழுந்த அடி என்றும்; இந்த விவகாரத்தில், நாட்டு மக்களிடமும் ராணுவத்தினரிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும்; இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், "36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பின்பற்றிய நடைமுறைகளில் சந்தேகம் கொள்வதற்கு எந்த காரணமும் இல்லை; இந்த ஒப்பந்த நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட உறுதியான காரணங்கள் எதுவும் இல்லை' என்று தீர்ப்பளித்தது.
மத்திய அரசுக்கான நற்சான்றிதழாக கருதப்படும் இத்தீர்ப்பை, பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளது. இந்த விவகாரத்தில் பொய்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முயன்ற ராகுல் காந்தி, மக்களிடமும் ராணுவத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அவரது பொய் பிரசாரம் அம்பலமாகிவிட்டது. அவர் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகி உள்ளது.
ரஃபேல் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கு காங்கிரஸ் தயாரா? என்று அமித் ஷா கேள்வியெழுப்பினார்.
"ராகுலுக்கு தோல்வி': மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், "ரஃபேல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யாக புனையப்பட்டவை. இந்த விவகாரத்தை வைத்து, அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தவர்கள் (ராகுல்), அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டனர். நாட்டின் பாதுகாப்பு, வர்த்தக நலன்களை, ரஃபேல் ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது' என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ரஃபேல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.
"காங்கிரஸின் பாரம்பரியம் ஊழல்': பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், "பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்வது காங்கிரஸின் பாரம்பரியமாகும். நாட்டின் பாதுகாப்பு குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை கிடையாது. 
மோடிக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக அவரிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.
"பொய் பிரசாரத்துக்கு முடிவு': மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நற்சான்றிதழ் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 
இதன் மூலம் ரஃபேல் தொடர்பான அனைத்து பிரசாரங்களுக்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது' என்றார்.

அனில் அம்பானி வரவேற்பு

தனது நிறுவனத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.
முன்னதாக, ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், அனில் அம்பானி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் எனக்கும் எதிராக அரசியல்ரீதியான தூண்டுதலின்பேரில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது இத்தீர்ப்பின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com