பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி 2017-18இல் நடைபெற்றது: சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் தகவல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி முழுவதும் 2017-18ஆம் ஆண்டில்தான் நடைபெற்றிருப்பது, சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி முழுவதும் 2017-18ஆம் ஆண்டில்தான் நடைபெற்றிருப்பது, சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தொழிலதிபர் நீரவ் மோடி தொடர்புடைய இந்த மோசடி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே (2011) தொடங்கிவிட்டதாக மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையோ அதற்கு மாறாக உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இரு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. ஒரு வழக்கில் நீரவ் மோடி, அவரது குடும்பத்தினர், தொழில்பங்குதாரர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் தவிர பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மேலும் சில அதிகாரிகள் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளனர். இவர்கள் அனைவருமே சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் 2014 முதல் 2017 வரை பணியாற்றியவர்கள்.
பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் போலியான உத்தரவாதக் கடிதங்களைப் பெற்று, அதன் மூலம் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டனர் என்பதே நீரவ் மோடி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டாகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் உள்பட தற்போது கைதாகியுள்ள இரு அதிகாரிகளும், நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டில் சுமார் 300 உத்தரவாத கடிதங்களை அளித்துள்ளனர். அதனடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, 2011-ஆம் ஆண்டிலேயே இந்த மோசடி தொடங்கிவிட்டதாக கூறப்படும் கருத்துகளுக்கு முரணான வகையில் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com