நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மெளனம்

தொழிலதிபர் நீரவ் மோடியின் வங்கி மோசடி விவகாரம், ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார் ஆகியவை குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல்
நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மெளனம்

தொழிலதிபர் நீரவ் மோடியின் வங்கி மோசடி விவகாரம், ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார் ஆகியவை குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
'மனதின் குரல்' (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூவம் அந்த விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் சொற்பொழிவு ஆற்றுவதைக் கேட்க ஆர்வமாக இருப்பதாகவும் கிண்டலாக அவர் கூறியுள்ளார்.
மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு பிரச்னைகள் குறித்து பேசும் அவர், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறும் மக்களிடம் கேட்கிறார். இந்நிலையில், அந்நிகழ்ச்சியை விமர்சிக்கும் வகையிலும், நீரவ் மோடி, ரஃபேல் விவகாரத்தை முன்னிறுத்தியும் ராகுல் காந்தி சில கருத்துகளை சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அதில் அவர் விமர்சித்துள்ளார். அதுதொடர்பான பதிவுகளில் ராகுல் குறிப்பிட்டிருப்பதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலமாக ரூ.22,000 கோடி கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் நீரவ் மோடி குறித்து பிரதமர் மோடி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று ரூ.58,000 கோடி ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் நடவடிக்கைகள் குறித்தும் பேசவில்லை. இந்த விவகாரங்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் சொற்பொழிவாற்ற வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். அவரது வீர உரையைக் கேட்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அந்தப் பதிவுகளில் ராகுல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் பயணம்: இதனிடையே, கர்நாடக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி வரும் 24-ஆம் தேதி அந்த மாநிலத்துக்குச் செல்ல உள்ளார். இதுதொடர்பான தகவல்களை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com