அமைச்சரவை விரிவாக்கம்: ராகுல் காந்தியுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தலைமையில் அமைந்துள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் மொத்தமுள்ள 34 அமைச்சரவை இடங்களில் காங்கிரஸýக்கு 22, மஜதவுக்கு 12 இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. முதல்வருடன் சேர்த்து மஜதவைச் சேர்ந்த 11 பேர் பதவியேற்றுள்ளதால், ஒரு இடம் காலியாக உள்ளது.
 துணை முதல்வருடன் சேர்த்து காங்கிரஸைச் சேர்ந்த 16 பேர் பதவியேற்றுள்ளதால், 6 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஜூலை 2 முதல் 13-ஆம் தேதி வரை நடந்த கர்நாடக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளதால், அமைச்சரவை விரிவாக்கம், வாரியங்கள் மற்றும் கழகங்களுக்கு தலைவர்களை நியமிக்க காங்கிரஸ் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
 புது தில்லியில் ஜூலை 22-ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் புதிய காரியக் கமிட்டியின் கூட்டம் அக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அக் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, புது தில்லிக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
 இதனிடையே, கர்நாடகத்தின் முன்னணித் தலைவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே உள்ளிட்டோர் புது தில்லிக்கு புறப்பட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியுடன் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அமைச்சரவை விரிவாக்கம், வாரியம், கழகங்களுக்கு தலைவர்கள் நியமனம், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேசவிருக்கிறார்கள்.
 முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வட கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே குறைகூறிவரும் நிலையில், இதைச் சமாளிக்க வட கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க காங்கிரஸ் யோசித்து வருகிறது. அப் பகுதியின் மூத்தத் தலைவர்களான எம்.பி.பாட்டீல், எஸ்.ஆர்.பாட்டீல், எச்.கே.பாட்டீல், சி.எஸ்.சிவள்ளி, பி.டி.நரேந்திர நாயக் உள்ளிட்டோர் அமைச்சரவையில் சேரும் வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 அமைச்சரவையில் இடம் கிடைக்காதவர்களை சமாதானப்படுத்த வாரியங்கள், கழகங்களுக்கு தலைவர்களை நியமிப்பது தவிர, முதல்வரின் செயலாளர்கள் பதவிகளையும் நிரப்ப காங்கிரஸ் விரும்புகிறது.
 இம் மாத இறுதியில் அநேகமாக 29-ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், இதற்கு முன்பாகவே வாரியங்கள், கழகங்களுக்கு தலைவர்களை நியமிக்க கட்சி தீவிரமாக யோசித்து வருகிறது. கட்சியில் நிலவும் அதிருப்தியைத் தணிக்கும் முயற்சியாக வாரியங்கள், கழகங்களுக்கு தலைவர்களை நியமிக்கும் நடைமுறையை விரைவுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ராகுல் காந்தியுடனான கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இதனிடையே, ம.ஜ.த.வுக்கு ஒதுக்கப்பட்டு காலியாக இருக்கும் ஓர் அமைச்சர் பதவியில் அக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் மகனுமான மது பங்காரப்பாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com