வருமான வரித்துறை வழக்கு: கர்நாடக அமைச்சர் சிவகுமாருக்கு பெங்களூரு நீதிமன்றம் 4ஆவது சம்மன்

வருமான வரிஏய்ப்பு செய்ததாக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

வருமான வரிஏய்ப்பு செய்ததாக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம், சிவகுமாருக்கு செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. சிவகுமாருக்கு எதிராக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர் மீது 3 வழக்குகள் இருந்தன. இவை அனைத்தும் வருமான வரிஏய்ப்பு தொடர்பானவைதான்' என்றார்.
வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், சிவகுமார், அவரது உதவியாளர்கள் சச்சின் நாராயண், சுனில் குமார் ஷர்மா, ஆஞ்சநேயா, ஹனுமந்தையா, ராஜேந்திரா ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிவகுமாரின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அண்மையில் சோதனைகளை மேற்கொண்டது. அப்போது சில ஆவணங்களும், ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது' என்றனர்.
பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து அமைச்சர் சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், எனது கைக்கு சம்மன் இன்னமும் வரவில்லை; பத்திரிகைகளில் இருந்தே எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பான தகவலை தெரிந்து கொண்டேன்' என்றார். இது அரசியல் ரீதியில் பழிவாங்கும் செயலா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதை பத்திரிகையாளர்கள்தான் கண்டுபிடித்து எழுத வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவகுமார், என்னை சிக்க வைக்க முயற்சிப்போருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் உள்ளன; அதை பொறுத்திருந்து தக்க சமயத்தில் வெளியிடுவேன்' என எச்சரித்தார். குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு கட்சித் தாவாமல் இருப்பதை இருப்பதை உறுதி செய்ய, கர்நாடகத்துக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அப்போது குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளித்தவர் அமைச்சர் சிவகுமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com