உத்தரப் பிரதேசத்தில் ஊழல் புகார்களைத் தெரிவிக்க இணையதளம்: யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார்

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று, திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, லக்னௌவில் நடைபெற்ற விழாவில்,
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் ராம் நாயக்கிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் யோகி 
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் ராம் நாயக்கிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் யோகி 

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று, திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, லக்னௌவில் நடைபெற்ற விழாவில், பொதுமக்கள் ஊழல் புகார்களை தெரிவிப்பதற்கான புதிய இணையதளத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று திங்கள்கிழமையுடன் (மார்ச் 19) ஓராண்டு நிறைவடைந்தது. 
இதையொட்டி, லக்னௌவிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா, உத்தரப் பிரதேச பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அப்போது, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்கான இணையதளத்தை, முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
ஊழல் சக்திகளை ஒடுக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், எந்த அதிகாரிக்கும் எதிராகவும் விடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். ஊழலில் ஈடுபடுபவர்களை ஒருபோதும் தப்பவிடமாட்டோம்.
4 லட்சம் பேருக்கு அரசு வேலை: காவல்துறை, வருவாய் துறை உள்பட மாநில அரசின் பல்வேறு துறைகளில் விரைவில் 4 லட்சம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். மாநில அரசின் குரூப்-சி, குரூப்-டி பணி நியமனங்களில் நேர்முகத் தேர்வு முறை ஒழிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையோ, ரௌடிகள் அட்டூழியமோ இல்லை என்று இப்போது என்னால் உறுதிபட கூற முடியும். முந்தைய ஆட்சிகளின்போது பல்வேறு தேர்வுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றன. அந்த நிலையை மாற்றி, தேர்வுகளை நியாயமான முறையில் நடத்தி வருகிறோம் என்றார் யோகி ஆதித்யநாத்.
கூட்டணி கட்சி புறக்கணிப்பு: இதனிடையே, ஓராண்டு நிறைவு விழாவில் பாஜகவின் கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி புறக்கணித்தது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் மாநில அமைச்சருமான ராஜ்பார் கூறியதாவது:
அயோத்தி, காசி, மதுரா ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டுவதில் மட்டுமே அவர்கள் (பாஜக) கவனம் செலுத்தி வருகின்றனர். ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான எந்த உறுதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை பலமுறை சுட்டிக் காட்டியும் பாஜக கண்டுகொள்ளவில்லை. 
இதே நிலை நீடித்தால், மாநிலங்களவைத் தேர்தலை எங்களது கட்சியின் 4 எம்எல்ஏக்களும் புறக்கணிப்பர் என்றார் அவர்.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ் தாக்கு: இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் கூறுகையில், 'யோகி ஆதித்யநாத் அரசுக்கான ஓராண்டு மதிப்பீட்டை, கோரக்பூர், பூல்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி அளித்ததன் மூலம் மக்கள் வழங்கிவிட்டனர்' என்றார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், 'பாஜக அரசு, தனது வெற்றியை கொண்டாடுவதற்கு பதிலாக தோல்விகள் குறித்து ஆராய வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com