பஞ்சாப் மாநில பட்ஜெட் தாக்கல்: புதிய வரி அறிமுகம்

பஞ்சாப் சட்டப் பேரவையில், 2018-19-ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

பஞ்சாப் சட்டப் பேரவையில், 2018-19-ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மாநில வளர்ச்சிக்கான வரி' என்ற பெயரில், வருமான வரி செலுத்துவோர் மீது புதிய வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 மொத்தம் ரூ.1,29,698 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பஞ்சாப் மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல் பேசியதாவது:
 கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டவும், செலவினங்களைக் குறைக்கவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் நிதி நிலைமையை பலப்படுத்தும் வகையில், "மாநில வளர்ச்சிக்கான வரி' என்ற பெயரில் புதிய வரியை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோர் மீது மாதம் ரூ.200 என்ற அடிப்படையில் புதிய வரி விதிப்பதற்கான சட்டம் கொண்டுவரப்படும். இதுபோன்ற வரி விதிப்பு, மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், ஆந்திரம் போன்ற முன்னணி மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
 2018-19ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த ரூ.4,250 கோடி ஒதுக்கப்படும். சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த புதிய நிதியம் அமைக்கப்படும். இதற்காக புதிய சமூக பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும்.
 2018-19ஆம் ஆண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், வரும் ஜூன் மாதத்துக்குள் மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்களும் திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதிகளாக மாற்றப்படும் என்றார் அவர்.
 இதனிடையே, பயிர்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் கட்சி எம்எல்ஏக்கள், அவையின் மையப்பகுதியில் திரண்டு முழக்கமிட்டனர். பின்னர், மாநில அரசைக் கண்டித்து, வெளிநடப்பு செய்தனர். தொலைநோக்கு பார்வையோ, வளர்ச்சிக்கான நோக்கமோ இல்லாத பட்ஜெட் என்று அவர்கள் விமர்சித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com