கர்நாடக சட்டப்பேரவையில் ஒலிக்குமா தமிழன் குரல்?

கர்நாடக சட்டப்பேரவையில் இத்தேர்தலுக்குப் பிறகாவது தமிழனுடைய குரல் ஒலிக்குமா? என்ற ஏக்கம் கர்நாடகத் தமிழர்களிடையே காணப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் ஒலிக்குமா தமிழன் குரல்?

கர்நாடக சட்டப்பேரவையில் இத்தேர்தலுக்குப் பிறகாவது தமிழனுடைய குரல் ஒலிக்குமா? என்ற ஏக்கம் கர்நாடகத் தமிழர்களிடையே காணப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடகத் தமிழர் ஒருவருடைய குரல் ஒலித்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. கோலார் தங்கவயல் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற எஸ்.ராஜேந்திரன் தான் கர்நாடக சட்டப்பேரவையில் கடைசியாக பேசிய தமிழன். இவர், 2004-ஆம் ஆண்டில் இருந்து 2008-ஆம் ஆண்டுவரை எம்எல்ஏவாகப் பணியாற்றினார். 2008, 2013-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு சில அரசியல் கட்சிகளால் தமிழர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டாலும், யாரும் வெற்றி பெறவில்லை. ஒரே தொகுதியில் 1.20 லட்சம் தமிழர்கள் தொகுப்பாக வாழும் கோலார் தங்கவயல் தொகுதியிலும் 2008-ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவரால் எம்எல்ஏவாக வெற்றி பெற முடியவில்லை.
ஏமாற்றம்
பெங்களூருவில் காந்திநகர், சாந்திநகர், சி.வி.ராமன்நகர், புலிகேசிநகர் தொகுதிகளில் தமிழர்கள் நின்று வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், அதற்கான வாய்ப்புகளை பிரபல அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மஜத போன்றவை தரவே இல்லை. இத்தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளில் தமிழர்கள் முன்னணித் தலைவர்களாக விளங்கியபோதும், இதுவரை தமிழர்களை ஊக்குவித்து வேட்பாளர்களாக நிறுத்த அரசியல் கட்சிகள் முன்வரவில்லை. கோலார் தங்கவயலில் தமிழர்களுக்கு வேட்பாளராக நிற்க வாய்ப்பு கிடைத்த போதும், 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர் ஒருவரால் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்தொகுதியில் இம்முறை தமிழர் ஒருவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அத்தொகுதியின் பொதுமக்கள் குறிப்பாக தமிழர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூருவில் உள்ள சி.வி.ராமன்நகர் தொகுதியில் பெங்களூரு மாநகராட்சி மேயரும் தமிழருமான ஆர்.சம்பத்ராஜை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல, மஜத சார்பில் கோலார் தங்கவயலில் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் எம்எல்ஏவும், தமிழருமான மு.பக்தவத்சலத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் காந்திநகர் தொகுதியில் யுவராஜ், கோலார் தங்கவயலில் மு.அன்பு, புலிகேசிநகரில் டி.அன்பரசு, ஹனூரில் விஷ்ணுகுமார் ஆகிய தமிழர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.சம்பத்ராஜ், மு.பக்தவத்சலம் உள்பட மொத்தம் 25 தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இவர்களில் யாராவது வெற்றி பெற்று, கர்நாடக சட்டப்பேரவைக்கு சென்று அங்கு தமிழரின் குரல் மீண்டும் ஒலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கர்நாடகத் தமிழர்களிடையே ஏக்கமாக பரிணமித்துள்ளது.
சிக்கல்கள்
கர்நாடகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அசாதாரண நிலையை அடைந்துள்ளது. தமிழர்களின் மிகப் பெரிய பிரச்னை வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு இல்லாமைதான். கூலித்தொழிலாளர்களாகவும், தள்ளுவண்டி வியாபாரிகளாகவும், சொற்ப வருவாய் சுயதொழில்களிலும் ஈடுபட்டுவருவோரை பொங்கல் சமயத்தில் ஊருக்கு போகும்போது பேருந்து நிலையங்களில் குவிந்திருப்பதை காணலாம். சொற்ப வருவாய் காரணமாக சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள முடியவில்லை. குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க இயலவில்லை. தமிழ்ச் சமூகம் துணிந்து தொழில் செய்ய மூலதனம் இல்லாமல் தவித்து வருகிறது. குடும்பத்தில் மட்டுமல்லாது, சமூகத்திலும் பொருளாதார போராட்டமே தமிழர்களின் வாழ்வியலாக மாறிவிட்டது. தப்பித்தவறி படித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களை தவிர மாநில அரசு வேலைகளில் போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்களில் எதிர்பார்க்கும் உயர்தர வேலைதிறன் இல்லாததால் கைநிறைய சம்பாதிக்கும் வேலை கிடைக்காமல் இன்னலை அனுபவித்து வருகிறார்கள். குடிசைப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு போதுமான சுகாதார வசதிகள் இருப்பதில்லை. மழை காலம், குளிர்காலம் வந்துவிட்டால் இம்மக்களின் இன்னல் சொல்லிமாளாது.
கல்வி வசதியைப் பெறுவதிலும் தமிழர்களுக்கு சரியான வாய்ப்பில்லை. கர்நாடகத்தில் மும்மொழி திட்டம் அமலில் இருப்பதால் கட்டாயமாக கன்னடம், மூன்றாம் மொழியாக ஹிந்தி படிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் உள்ளனர். இம்மொழிகளை கற்க தமிழர்கள் சிரமப்படுகிறார்கள். இம்மொழிகளை கற்க போதுமான பயிற்சி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள். தமிழ் மொழியைக் கற்காமலே படித்து முடித்துவிடும் அபாயத்தில் தமிழர்கள் உள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் கர்நாடகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். தமிழ் மொழி தெரியாவிட்டால் பண்பாடு, கலை உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் தமிழர்கள் இழக்கும் ஆபத்தும் உள்ளது. எதிர்காலத்தில் தமிழர்கள் இருப்பார்கள், தமிழ் பேசுவோர் இருக்க மாட்டார்கள் என்ற நிலை உருவெடுக்கும்.
சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு சிக்கல்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசியல் கட்சிகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகிறார்களே தவிர, அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதில்லை. தமிழர்களுக்கென அரசியல் தலைமை இல்லாததால், அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மொழி சிறுபான்மையினரான தமிழர்களின் குறைந்தபட்ச மொழி உரிமையைக்கூட காத்துக் கொள்ள இயலாமல் தவிக்கும் நிலை உள்ளது. கர்நாடகத் தமிழர்களின் அரசியல் தலைமையை அரசியல் கட்சிகளில் தேடும் நிலை உருவாகிவிட்டது. அதன்விளைவாக, சி.வி.ராமன்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஆர்.சம்பத்ராஜ், கோலார் தங்கவயலில் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் மு.பக்தவத்சலம் ஆகிய இருவரும் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் நம்பிக்கை நட்சத்திரங்களாக தென்பட தொடங்கியுள்ளனர்.
ஒலிக்குமா?
சி.வி.ராமன்நகர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.சம்பத்ராஜ், பெங்களூரு மாநகராட்சி மேயராக கடந்த 6 மாதங்களாக செயல்பட்டுள்ளார். மேயராக்கப்பட்டவரை வேட்பாளராக்கியதற்கு அவர் ஆற்றியிருக்கும் பணி, சம்பாதித்திருக்கும் நற்பெயர், வளர்த்துக்கொண்டிருக்கும் நிர்வாகத்திறன் ஆகியவையே காரணங்களாகும். தேவர்ஜீவனஹள்ளி வார்டில் மாமன்ற உறுப்பினராக வென்றிருக்கும் சம்பத்ராஜ், மிகவும் பின்தங்கிய அந்த வார்டை மேம்படுத்தியுள்ளதை கன்னடர்கள்,இஸ்லாமியர்களே வெகுவாகப் பாராட்டுகிறார்கள். அங்கு தொடர்ந்து 2 முறை வென்று, கடந்த 10 ஆண்டுகளாக மாமன்ற உறுப்பினராக நற்பெயரை பெற்றிருக்கிறார். அதனால் தான் கன்னடர்களின் எதிர்ப்பையும் மீறி மேயர் பதவி சம்பத்ராஜூக்கு வாய்த்தது. அப்படியானால், இவர் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றால் சி.வி.ராமன்நகர் வளரும் என்பது உறுதி என்றாலும், கர்நாடகத் தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நம்பிக்கை தமிழர்களிடையே துளிர்த்துள்ளதை தவிர்க்க இயலவில்லை. பொறியியல் பட்டம் படித்த இளைஞர், துடிப்பாக செயல்படக்கூடிய, சரளமாக கன்னடம் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஆர்.சம்பத்ராஜ், தமிழர்களின் மொழி சிறுபான்மையினருக்கான உரிமைகளை அரசியல்ரீதியாக வென்றெடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இது கர்நாடகத்தின் பல பகுதிகளை சேர்ந்த தமிழர்களை சி.வி.ராமன்நகர் தொகுதிக்கு வரவழைத்து, தன்னலம் கருதாமல் தேர்தல் பணி ஆற்ற வைத்துள்ளது. எனவே, ஆர்.சம்பத்ராஜின் வெற்றி தமிழர்களின் வெற்றியாக மாறும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
கோலார் தங்கவயலில் போட்டியிடும் மு.பக்தவத்சலம், அத்தொகுதியில் இருந்து 3 முறை வென்றிருக்கிறார். 3 முறையும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற பக்தவத்சலத்தால், கடந்த 10 ஆண்டுகளாக மஜத வேட்பாளராக வெற்றி பெற முடியவில்லை. தமிழர்களின் வாக்குகளை அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் பகிர்ந்து கொள்வதால், மு.பக்தவத்சலத்தின் வெற்றி சாத்தியமாகாமல் போய்விட்டது. இம்முறை எப்படியும் வென்றுவிடுவது என்று பக்தவத்சலமும், பக்தவத்சலத்தை வெற்றி பெற வைப்பது என்று தமிழர்களும் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். கோலார் தங்கவயலில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை மாற்றுவதற்கு ஏற்கெனவே கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட பக்தவத்சலம், இம்முறை அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வதோடு, அடுத்தத் தலைமுறை தமிழர் தலைமையையும் அடையாளம் காட்ட வேண்டுமென்பதே கோலார் தங்கவயல் மட்டுமல்லாது கர்நாடகத் தமிழர்களின் விருப்பமுமாக உள்ளது. சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை ஒருமுகப்படுத்தினால், கர்நாடகத் தமிழர்களின் அரசியல் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக வாய்த்திருக்கும் ஆர்.சம்பத்ராஜ், மு.பக்தவத்சலம் ஆகிய இருவரும் கரைசேரும் வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் கர்நாடகத் தமிழர்களின் உரிமைக் குரலாக கர்நாடக சட்டப்பேரவையில் தமிழனின் குரல் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com