மோடி ஆட்சியில் சிபிஐ அமைப்புக்குள்ளேயே மோதல்: ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சிபிஐ அமைப்புக்குள்ளேயே மோதல் நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி ஆட்சியில் சிபிஐ அமைப்புக்குள்ளேயே மோதல்: ராகுல் குற்றச்சாட்டு


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சிபிஐ அமைப்புக்குள்ளேயே மோதல் நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியின் இடைத்தரகர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சிபிஐ அமைப்பின் அடுத்த இயக்குநராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ள அதிகாரிகளின் பட்டியலில் ராகேஷ் அஸ்தானாவின் பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில், அவருக்கு எதிராக, சிபிஐ அமைப்பே நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் செல்லப்பிள்ளை - குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி - கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியவர்- சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குநராக இரண்டாவது தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் ராகேஷ் அஸ்தானா. இவர் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியல் பழிவாங்கும் கருவியாக சிபிஐ அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. சிபிஐ அமைப்பு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும், அந்த அமைப்புக்குள்ளேயே மோதல் வெடித்துள்ளது என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com