வங்கதேச விடுதலைக்கு உயிர்நீத்த இந்திய வீரர்கள் கெளரவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரில் உயிர்நீத்த 12 இந்திய வீரர்களின் குடும்பத்தினரை வங்கதேச அரசு ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரில் உயிர்நீத்த 12 இந்திய வீரர்களின் குடும்பத்தினரை வங்கதேச அரசு ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தது. இதுதொடர்பான நிகழ்ச்சி மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்றது.
அந்த விழாவில், வங்கதேச விடுதலைப் போர் விவகாரத்துறை அமைச்சர் ஏ.கே.எம்.மொஸம்மல் ஹக் கலந்து கொண்டு தியாகிகளின் குடும்பத்தினருக்கு பதக்கங்களை வழங்கினார். 
போரில் உயிர் நீத்த இந்திய ராணுவத்தின் 7 வீரர்கள், விமானப் படையைச் சேர்ந்த இருவர், எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், ஒரு கடற்படை வீரர் ஆகியோரது குடும்பத்தினர் கெளரவிக்கப்
பட்டனர்.
கடந்த 1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் - இந்தியா இடையே நடந்த போரில் இந்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 1,600 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அவ்ரகள் அனைவரது குடும்பத்தினரையும் படிப்படியாக கெளரவிக்கும் நடவடிக்கைகளை வங்கதேச அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்திய வீரர்களை கெளரவிக்கும் நடவடிக்கையை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, முதல் முறையாக தில்லியில் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அப்போது 7 வீரர்களின் குடும்பத்தினருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாம் ஆண்டில் 12 வீரர்களின் குடும்பத்தினரை கெளரவிக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைத்து இந்திய வீரர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல தளபதி, விமானப் படையில் போர் நடவடிக்கைப் பிரிவின் தலைமைத் தளபதி, கிழக்கு மண்டல விமானப்படைத் தளபதி மற்றும்  ஒய்வுபெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வங்கதேசத்தின் சார்பில், விடுதலைப் போரில் கலந்து கொண்ட 30 வீரர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் 6 அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வங்கதேச அமைச்சர் மொஸம்மல் ஹக், இந்திய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேசும்போது, ஒவ்வொரு வங்கதேசத்தவரின் வாழ்நாளிலும் டிசம்பர் 16 என்பது சிறப்புமிக்க நாள் என்றார். 
சுமார் 30 லட்சம் பேர் படுகொலை, 2 லட்சம் பெண்கள் நேர்ந்த பாலியல் வன்கொடுமை என பாகிஸ்தான் படையினர் 9 மாதங்களாக இன அழிப்பை மேற்கொண்ட பிறகே சுதந்திரம் என்பது கிடைத்ததாகவும், வங்கதேச மக்களின் நலனுக்காக இந்திய வீரர்கள் போரிட்டு மடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மம்தா புகழஞ்சலி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ""போர் நினைவு நாளில், 1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் போரிட்ட வீரமிக்க இந்திய வீரர்களை நான் நினைவுகூருகிறேன்'' என்று 
குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com