மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி:  ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி:  ராகுல் காந்தி


மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இப்போது நமது நாட்டில் 15 பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே ரூ.3.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மத்திய அரசைக் குற்றம்சாட்டினார்.
தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் கூறியதாவது:
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்தோம். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் முதல்வர்கள் பதவியேற்ற 6 மணி நேரத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். அடுத்து சத்தீஸ்கரில் விரைவில் வாக்குறுதியை நிறைவேற்ற இருக்கிறோம்.
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியைத் தூங்கவிட மாட்டோம். இதையும் மீறி அவர் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய தயக்கம் காட்டும் மத்திய அரசு, மோடி, அமித் ஷாவின் தொழிலதிபர் நண்பர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்து வருகிறது. அனில் அம்பானி உள்பட 15 பெரும் தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு சாதகமாக உள்ளது. அதே நேரத்தில் சிறு வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர் பக்கத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் துணை நிற்கின்றன.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைதான் உலகின் மிகப்பெரிய ஊழல். அந்த ஊழலில் பொதுமக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகளிடம் இருந்து இந்த அரசு பணத்தைக் கொள்ளை
யடித்தது. ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்துவிட்டு அதனை சிறு தவறு என்று கூறி மறைக்க மத்திய அரசு முயலுகிறது. இதுபோன்ற பல ஏமாற்று வேலைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரஃபேல் விமான கொள்முதல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூட இந்த அரசு தயாராக இல்லை என்றார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறித்த கேள்வியை ராகுல் தவிர்த்து விட்டார். பிகார், உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் தொழிலாளிகளால், பல இடங்களில் மத்தியப் பிரதேச தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை என்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கூறியதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு, கமல்நாத் என்ன பேசினார் என்பது சரியாகத் தெரியாமல் இது குறித்து பதிலளிக்க முடியாது என்று ராகுல் கூறிவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com