சோனியா பற்றிய கேள்விகளை எப்படி எதிர்கொள்வது? துண்டு சீட் கொடுத்து ஆலோசனை கேட்கிறார் மிஷெல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் சோனியா காந்தி பற்றிய கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என இடைத் தரகரான பிரிட்டனைச்
சோனியா பற்றிய கேள்விகளை எப்படி எதிர்கொள்வது? துண்டு சீட் கொடுத்து ஆலோசனை கேட்கிறார் மிஷெல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

புதுதில்லி: விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் சோனியா காந்தி பற்றிய கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என இடைத் தரகரான பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் வழக்குரைஞர்களிடம் துண்டு சீட்டுகளை கொடுத்து அனுப்புகிறார் என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ-யும்ஸ அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 

ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்களில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்படுபவர் பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷெல் (57). விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோருடன் சேர்ந்து குற்றச் சதியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டு உள்ளது.

இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்வதை மிஷெல் தவிர்த்து வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக, பிணையில் வெளிவர இயலாத பிடியாணையை தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்தது. அதனடிப்படையில், சர்வதேச காவல்துறை மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

துபையில் கடந்த 2017, பிப்ரவரியில் துபையில் மிஷெல் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த துபை நீதிமன்றம், மிஷெலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து, அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மிஷெல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து கிறிஸ்டியன் மிஷெல் துபையிலிருந்து கடந்த செவ்வாய்கிழமை (டிச 4) இரவு 10.30 மணியளவில் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். அவர் தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அடுத்த தினமான புதன்கிழமை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு, சிபிஐ அதிகாரிகள் அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இது தில்லி நீதிமன்றத்தால் முதலில் 5 நாள்கள், பின்னர் 4 நாள்கள் என நீட்டிக்கப்பட்டது. 

இதனிடையே, மிஷெல் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பான உத்தரவை நிறுத்தி வைத்து, அவரை 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி நீதிமன்றம் கடந்த 19-ஆம் தேதி உத்தரவிட்டது. 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை(டிச.22) மிஷெலை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து தில்லி நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும், அவரை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

இதன்பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், மிஷெலை 7 நாள்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தார்.

மேலும், மிஷெல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார். இதன்படி அமலாக்க துறையினர் கடந்த 7 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.  

இந்நிலையில், காவல் முடிந்து நீதிமன்றத்தின் முன் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் இன்று ஆஜர்படுத்தினர். 

இதன்பின் அமலாக்க துறையினர் நீதிமன்றத்தில் கூறும்பொழுது, மிஷெலுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தினை அவர் தவறாக பயன்படுத்தினார் என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி பெயர் வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​அவரது வழக்குரைஞர்களுக்கு ஒரு துண்டு சீட்டுகளை கொடுத்து "என்ன சொல்வது" என்று கேட்கிறார் என்றும் எந்த விஷயத்திற்காக அவர் சோனியா பெயரை குறிப்பிட்டார் என்பதை விசாரணையின் இப்போதைய கட்டத்தில் தெரிவிக்க முடியாது. இத்தாலிய பெண்ணின் மகன் என அவர் கூறியதுடன், அந்த பெண் மகன் இந்தியாவின் அடுத்த பிரதமர் எனவும் கூறினார் என அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், விசாரணையின் போது மிஷெல் "பெரிய மனிதர்" அல்லது 'ஆர்' என்றொரு சங்கேத வார்த்தையைக் கூறுவதாகவும் அந்த  'ஆர்' டீகோட் செய்ய வேண்டியுள்ளதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. 

விசாரணையின் போது மிஷெல் துன்புறுத்தப்படுவதாக, அவரது வழக்குரைஞர் பொய் சொல்வதை தடுக்க வேண்டும் என தெரிவித்த்து.

இதையடுத்து மிஷெலுக்கான அமலாக்கத்துறையின் காவலை 7 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com