கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுகளில் வெற்றி பெறுவதே இலக்கு: குமாரசாமி பேட்டி

வரும் 2019 மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் 28 தொகுதிகளில் வெற்றி இலக்கு என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 
கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுகளில் வெற்றி பெறுவதே இலக்கு: குமாரசாமி பேட்டி


பெங்களூரு: வரும் 2019 மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் 28 தொகுதிகளில் வெற்றி இலக்கு என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 65 சத வாக்குகள் பதிவாகியிருந்தன.

கர்நாடகத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (நவ.3) நடந்தது. இத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து முக்கியக் கட்சியாக பாஜக மட்டுமே களத்தில் இருந்தது.

பெல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வி.எஸ்.உக்ரப்பா, பாஜக வேட்பாளராக ஜே.சாந்தா; சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக மது பங்காரப்பா, பாஜக வேட்பாளராக பி.ஒய்.ராகவேந்திரா; மண்டியா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக சிவராமே கெளடா, பாஜக வேட்பாளராக சித்தராமையா; ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆனந்த் நியாமகெளடா, பாஜக வேட்பாளராக ஸ்ரீகாந்த் குல்கர்னி; ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக அனிதா குமாரசாமி, பாஜக வேட்பாளராக தேர்தலில் இருந்து விலகிய எல்.சந்திரசேகர்(வாக்குச்சீட்டில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது) உள்ளிட்ட 31 பேர் போட்டியில் இருந்தனர்.

5 தொகுதிகளிலும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே 5 தொகுதிகளிலும் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மண்டியா, சிவமொக்கா, பெல்லாரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிகளுக்கு வரவில்லை. ஜம்கண்டி தொகுதியில் வாக்களிக்க மக்கள் ஓரளவு ஆர்வமாக வந்திருந்தனர். ஆனால், பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகர் தேர்தலில் இருந்து விலகியிருந்த நிலையிலும் ராமநகரம் தொகுதியில் வாக்களிக்க மக்கள் எதிர்பார்த்ததைவிட ஆர்வம் காட்டினர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 5 தொகுதிகளிலும் சராசரியாக 65.57 சத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இடைத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பெல்லாரி, சிவமொக்கா, மண்டியா, ஜம்கண்டி, ராமநகரத்தில் உள்ள கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பதிவாகியுள்ள வாக்குகள் இன்று நவ.6-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பாஜக வேட்பாளராக பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். 

ராம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில், மஜத வேட்பாளரும், முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இந்த வெற்றியை, காங்கிரஸ் மற்றும் மஜத தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும், இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம் என கூறினார். 

இடைத் தேர்தல் முடிவு, கூட்டணி தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, வரும் 2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவில் 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும், அதன் முதல் படிதான் இந்த வெற்றி என்றும் குமாரசாமி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com