நாடாளுமன்றச் சாலையை அடைந்தது விவசாயிகள் பேரணி: போக்குவரத்து பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பேரணி நாடாளுமன்றச் சாலையை அடைந்தது.
நாடாளுமன்றச் சாலையை அடைந்தது விவசாயிகள் பேரணி: போக்குவரத்து பாதிப்பு


புது தில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பேரணி நாடாளுமன்றச் சாலையை அடைந்தது.

விவசாயிகளின் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 3,500 காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியில் குவிந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பேரணி இன்று மதியம் 12.30 மணியளவில் நாடாளுமன்ற சாலையில் அடைந்தது.
 

இதன் காரணமாக ஜவகர்லால் நேரு மார்க், குரு நானக் கண் மருத்துவமனை அருகே, மகாராஜா ரஞ்ஜித் சிங் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யவும், விவசாய விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயம் செய்யவும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகளின் பேரணி தில்லியில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நாடாளுமன்றச் சாலையில் இன்று நடைபெறுகிறது. 

முக்கிய கோரிக்கைகள்: குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்க வேண்டும். பொது விநியோக முறையை விரிவாக்கம் செய்ய வேண்டும். 

வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடத்தினர். அவர்களைத் தடுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதையடுத்து, விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. 

இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மீண்டும் வியாழக்கிழமை பேரணியை நடத்தியது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழகத்திலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் வந்துள்ளனர்.

700 விவசாயிகள் தற்கொலை: இந்த பேரணி குறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நெல், பருத்தி, தோட்டக்கலைப் பயிர்களான வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற வங்கிக் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் சுமார் 700 விவசாயிகள் தமிழகத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக போதுமான மழையின்றி தவித்தோம். நிகழாண்டு புயலால் பாதிக்கப்பட்டுள்ளோம். 

இந்த பேரணியில் பங்கேற்க திருச்சி, கரூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் வந்துள்ளனர். ஏற்கெனவே விவசாயக் கடன் பிரச்னையால் உயிரிழந்த இரு விவசாயிகளின் மண்டை ஓடுகளுடன் பேரணியில் பங்கேற்றோம். 

இதையடுத்து, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல்துறை தடைவிதித்தால் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com