சபரிமலை தீர்ப்பு: வலுக்கிறது எதிர்ப்பு

சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்திலுள்ள சங்கனாசேரியில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் திரளாக பங்கேற்ற பெண்கள்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்திலுள்ள சங்கனாசேரியில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் திரளாக பங்கேற்ற பெண்கள்.

சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் கோட்டயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கண்டன பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
சபரிமலை தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு, எதிர்க்கட்சிகளான காங்கிரஸýம், பாஜகவும் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு தடை இருந்து வந்தது. இந்நிலையில், அதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.
இதற்கு சில தரப்பினர் ஆதரவும், பரவலாக எதிர்ப்புகளும் தெரிவித்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று கேரள அரசு தெரிவித்தது. 
தொடர்ந்து தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது. எனினும், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளம் உள்பட நாடெங்கிலும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களும் பெருமளவில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சபரிமலை தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம், நாயர் சேவை சொசைட்டி (என்எஸ்எஸ்) மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் கோட்டயம் மாவட்டம் சங்கனாசேரியில் சனிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற்றது. தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம் இவ்வாறு பேரணி நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
காங்கிரஸ், பாஜக ஆதரவு: இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ண மேனன் ஆகியோரும் பங்கேற்றனர். தந்திரி குடும்பத்தின் சார்பில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மோகனரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் கலந்துகொண்டனர். பந்தள ராஜ குடும்பத்தின் பிரதிநிதியாக சசிகுமார வர்மா கலந்துகொண்டார்.
இவர்களுடன், யோகக்ஷேமா சபா தலைவர் அக்கீராமன் காளிதாஸ் பட்டதிரிபாட், நாயர் சேவை  சொûஸட்டியின் பதிவாளர் பி.என். சுரேஷ், இயக்குநர்கள் குழு உறுப்பினர் ஹரிகுமார் கொயிக்கல் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். பேரணியில் பங்கேற்றபோது தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது:
அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது, சபரிமலையின் அழிவுக்கு வழிவகுப்பதுடன், அதன் மாட்சிமையையும் இழக்கச் செய்யும். பந்தள ராஜ குடும்பம், ஐயப்ப பக்தர்கள், ஹிந்து சமயத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பெண்கள் ஆகியோர், சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிப்பதை விரும்பவில்லை. அப்போது, உண்மையில் யார் அதை கட்டாயப்படுத்துகிறார்கள்?
சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், பெண்களுக்கான சுதந்திரம் கிடைத்துவிடும் என எந்த அடிப்படையில் கூறப்படுகிறது? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானதாகும். அந்தத் தீர்ப்புக்குப் பின்னால் சில உள்விவகாரங்கள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஹிந்து கலாசாரத்தை பாதிப்பதாக உள்ளது என்று கண்டரரு ராஜீவரரு கூறினார்.
இந்த பேரணிக்குப் பிறகு நாயர் சேவை சொசைட்டி பொதுச் செயலர் ஜி. சுகுமாறன் நாயருடன், தந்திரி குடும்பத்தினரும், பந்தள ராஜ குடும்பத்தினரும் கலந்தாலோசனை நடத்தினர்.

தொடரும் ஆர்ப்பாட்டங்கள்: எர்ணாகுளம் மாவட்டம் திரிபுனிதுராவிலும், கோட்டயம் மாவட்டம் திருனக்கராவிலும் ஞாயிற்றுக்கிழமை பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ஹிந்து பாரம்பரியமான சனாதன தர்மத்தை காக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள அரசு அழைப்பு: தந்திரி, ராஜ குடும்பத்தினர் நிராகரிப்பு

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சுமுகத் தீர்வு காணும் முயற்சியாக சபரிமலை தந்திரி மற்றும் பந்தள ராஜ குடும்பத்தினருடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இரு தரப்பும் அந்த அழைப்பை  ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தன.

தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதென கேரள அரசு முடிவு செய்யும் வரையில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. சுகுமாறன் நாயருடன் நடத்திய கலந்தாலோசனைக்குப் பிறகே, முதல்வர் பினராயி விஜயனுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என்று தந்திரி மற்றும் பந்தள ராஜ குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் வரையில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று இரு குடும்பத்தினருக்கும் சுகுமாறன் நாயர் அறிவுறுத்தியுள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
"மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம்': தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தந்திரி குடும்பத்தைச் சேர்ந்தவரும், 3 தந்திரிகளில் ஒருவருமான கண்டரரு மோகனரரு செங்கனூரில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சபரிமலையில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாங்கள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம். அதன் மீது என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் முடிவை ஏற்கெனவே கேரள அரசு எடுத்துவிட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

பந்தள ராஜ குடும்பத்தினரின் கருத்தை அறிந்த பிறகே, அரசுடனான பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்துகொள்ள இயலும். இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் பெண் காவலர்களை நியமிக்கும் அரசின் முடிவு, கோயிலின் பாரம்பரியம் மற்றும் மதச்சடங்குகளுக்கு எதிரானது என்று கண்டரரு மோகனரரு கூறினார்.

பேச்சுவார்த்தை அர்த்தமற்றது: பந்தள ராஜ குடும்ப உறுப்பினரான சசிகுமார வர்மா கூறியதாவது: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தவறானதாகும். இது சுவாமி ஐயப்பனுக்கான மதச் சடங்குகளை மீறிய செயல். ஆனால், கேரள அரசோ உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோராமலேயே, பெண்களை அனுமதிக்கத் தயாராகிவிட்டது. 

எனவே, இப்போது பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்ற ஒன்றாகும் என்று சசிகுமார வர்மா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com