அம்ரபாலி நிறுவன முறைகேடு: ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள  கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அம்ரபாலி நிறுவன முறைகேடு: ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள  கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தில்லியைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று முறைகேடு செய்தது மற்றும் திவால் அறிவிப்பு வெளியிட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றததில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக 46 அம்ரபாலி குழும நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அதன் இயக்குநர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.    

இந்த வழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் அருண் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் கடந்த இரண்டு மாதங்களாக இயக்குநர்கள் மூவரும் , நீதிமன்ற உத்தரவின்படி தொடர்புடைய 46 நிறுவனண்களுக்கான  ஆவணங்களை தடயவியல் பரிசோதனைக்கு தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த நீதிபதிகள் கூறியதாவது: 

உங்களது நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறுவதாக அமைந்துள்ளது. நீங்கள் நீதிமன்றத்துடன் கண்ணாமூச்சி ஆடுகிறீர்கள். நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறீர்கள்.  

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், அம்ரபாலி நிறுவன இயக்குநர்கள் மூவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டதோடு, 46 குழுமம் நிறுவனங்கள் தொடர்பாக அவர்களிடம் இருக்கும் ஆவணங்கள் அனைதத்தையும் ஒன்று விடாமல் கைப்பற்றுமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.  

இந்நிலையில் கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கு புதனன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அருண் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவணங்களைக்  கைப்பற்றுவது தொடர்பான உத்தரவின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி நீதிமன்றத்தில் காவல்துறையினர் எடுத்துரைத்தனர். 

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com