வெறுப்பூட்டும் பேச்சு: ஜாகிர் நாயக்குக்கு மலேசிய அதிகாரிகள் அழைப்பாணை

மலேசிய ஹிந்துக்கள் மற்றும் சீனர்களுக்கு எதிராகப் பேசியதற்காக சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு மலேசிய அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
வெறுப்பூட்டும் பேச்சு: ஜாகிர் நாயக்குக்கு மலேசிய அதிகாரிகள் அழைப்பாணை


மலேசிய ஹிந்துக்கள் மற்றும் சீனர்களுக்கு எதிராகப் பேசியதற்காக சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு மலேசிய அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
மும்பையில் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பை நடத்தி வந்த ஜாகிர் நாயக் மீது கருப்புப் பண மோசடி, வெறுப்புப் பேச்சு மூலம் தீவிரவாதத்தை தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. 
வழக்கு விசாரணைக்கு அஞ்சி வெளிநாடு தப்பிச் சென்ற அவர், தற்போது மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரைத் தேடப்படும் நபராக இந்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தது.
இந்நிலையில், வெறுப்பூட்டும் வகையில் பேசியதற்காக, அவருக்கு மலேசிய காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சிஐடி காவல் துறை இயக்குநர் ஹுசிர் முகமது கூறியதாவது:
கோதா பாருவில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஜாகிர் நாயக் பேசும்போது மலேசியாவில் வசிக்கும் சீனர்களுக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் பேசினார். இதனால், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மலேசிய காவல் துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்றார். 
ஜாகிர் நாயக்குக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இது, இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, அவரிடம் கடந்த 16-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதற்கு சீனர்கள் மலேசியாவின் பழைமையான விருந்தாளிகள்; அவர்கள்தான் முதலில் வெளியேற வேண்டும் என்று ஜாகிர் நாயக் பதிலளித்தார். 
மேலும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களைவிட மலேசியாவில் வாழும் ஹிந்துக்கள்  100 சதவீதம் கூடுதலாக உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மஹாதிர் எச்சரிக்கை: ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சால், மலேசிய பிரதமர் மஹாதிர் அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சீனர்கள் சீனாவுக்குப் போக வேண்டும்; இந்தியர்கள் இந்தியாவுக்குப் போக வேண்டும் என்று ஜாகிர் நாயக் கூறுகிறார். நான்கூட இதுவரை இதுபோன்று பேசியதில்லை. இதன் மூலம், அவர் இனவெறியை மக்கள் மத்தியில் தூண்டுவதும், அவர் இனவாத அரசியலில் ஈடுபட விரும்புகிறார் என்பதும் தெளிவாகிறது. ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஜாகிர் நாயக்கின் பேச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து காவல்துறை முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.
ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சால், மலாக்கா மாகாணத்தில் அவரது நிகழ்ச்சிக்கு திங்கள்கிழமை தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே, பெர்லிஸ், சரவாக், ஜொகூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா ஆகிய மாகாணங்களில் ஜாகிர் நாயக் உரை நிகழ்த்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com