அரசு மரியாதையுடன் அருண் ஜேட்லி உடல் தகனம்

மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லியின் உடல் வேத மந்திரங்கள் முழங்க அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
அரசு மரியாதையுடன் அருண் ஜேட்லி உடல் தகனம்

மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லியின் உடல் வேத மந்திரங்கள் முழங்க அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
 அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லி, இறுதிச் சடங்குகளைச் செய்து சிதைக்கு தீ மூட்டினார்.
 குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் உள்ள பிரதமர் மோடி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.
 சுவாசப் பிரச்னை உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி, கடந்த 9- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சனிக்கிழமை மதியம் 12.07 மணியளவில் காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் தெற்கு தில்லி, கைலாஷ் காலனியில் உள்ள வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அஞ்சலிக்காக ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 மணியளவில் தேசியக் கொடி போர்த்தப்பட்ட அவரது உடல், தீனதயாள் உபாத்யாய் மார்கில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜாவடேகர், பியூஷ் கோயல், நிதின் கட்கரி, அனுராக் தாக்கூர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ், யோகா குரு பாபா ராம்தேவ், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங், காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 பாஜக தலைமையகத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது பிரியத்துக்குரிய தலைவருக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
 அப்போது, "வானம், பூமி உள்ளவரை ஜேட்லியின் பெயர் நிலைத்திருக்கும்', "உங்களது பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது' போன்ற கோஷங்களை தொண்டர்களும், பொதுமக்களும் எழுப்பினர்.
 பின்னர், பாஜக தலைமையகத்தில் இருந்து மதியம் 1 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் ஜேட்லியின் புகழ்வாசகங்கள் முழங்க நிகம் போத் காட் தகன மைதானம் அமைந்துள்ள யமுனை ஆற்றங்கரைப் பகுதிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. ஊர்தி சென்ற பாதையின் இருமருங்கிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மலர்களைத் தூவி அவருக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். அருண் ஜேட்லியின் குடும்பத்தினரும் அங்கு கூடியிருந்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஜேட்லியின் உடல் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. மாலை 3 மணியளவில் அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லி, இறுதிச் சடங்குகளைச் செய்தார். அப்போது நிகம் போத் காட் பகுதியில் மழை பெய்தது. கொட்டும் மழைக்கு மத்தியில் தலைவர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அருண் ஜேட்லியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
 இறுதிச் சடங்கில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜாவடேகர், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மாநில முதல்வர்கள் எடியூரப்பா (கர்நாடகம்), முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் (மகாராஷ்டிரம்), அரவிந்த் கேஜரிவால் (தில்லி), துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா, பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி, கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கௌதம் கம்பீர், முன்னாள் தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com