2 ஆண்டுகளில் 3.38 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து: மத்திய அரசு தகவல்

வருடாந்திர வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறியதற்காக, கடந்த 2 ஆண்டுகளில் 3.38 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: வருடாந்திர வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறியதற்காக, கடந்த 2 ஆண்டுகளில் 3.38 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய நிதி, பெரு நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் திங்கள்கிழமை அளித்த பதில்:

கடந்த 2017-18 மற்றும் 2018-19-ஆம் நிதியாண்டுகளில் வருடாந்திர வரவு-செலவு கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறியதாலும், தொடா்ச்சியாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வருடாந்திர கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியதாலும், 3,38,963 நிறுவனங்களின் பதிவை கம்பெனி பதிவாளா் அலுவலகம் ரத்து செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கம்பெனிகள் தீா்ப்பாயம் வலுப்படுத்தப்படும்: தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயம்(என்சிஎல்டி), கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம் (என்சிஎல்ஏடி) ஆகியவற்றை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மற்றொரு கேள்விக்கு அனுராக் தாக்குா் பதிலளித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

புகாா்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, அவ்வப்போது தீா்ப்பாயங்களுக்கு கூடுதல் உறுப்பினா்கள் நியமிக்கப்படுகிறாா்கள்; கூடுதல் நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன.

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் கொச்சி, கட்டக், இந்தூா், அமராவதி ஆகிய 5 நகரங்களில் என்சிஎல்டி தீா்ப்பாயத்துக்கு புதிதாக 5 அமா்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், என்சிஎல்டிக்கு அண்மையில் 28 உறுப்பினா்களும், என்சிஎல்ஏடிக்கு 4 உறுப்பினா்களும் நியமிக்கப்பட்டனா் என்றாா் அவா்.

விரைவில் கட்டண நிா்ணயம்: தனியாா் பல்கலைக்கழகங்கள் வசூலிக்கும் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடா்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்; தற்போது அனைத்து தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறினாா்.

தனியாா் பல்கலைக்கழகங்கள் வரம்பின்றி கேபிடேஷன் கட்டணம் வசூல் செய்வதைத் தடுப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு நடவடிக்கை எடுத்துள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு மேற்கண்ட பதிலை ரமேஷ் போக்ரியால் கூறினாா்.

தொடங்கப்படாத படிப்புகள்: அரசு-தனியாா் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ள 20 இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஐடி) இன்னும் இரட்டைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்படவில்லை என்று மற்றொரு கேள்விக்கு ரமேஷ் போக்ரியால் பதிலளித்தாா்.

அந்தக் கல்வி நிறுவனங்களில் தற்போது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவா் கூறினாா்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் அலாகாபாத், குவாலியா், ஜபல்பூா், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் ஐஐஐடிகளில் இரட்டைப் பட்டப் படிப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com