"உங்கள் உள்ளத்தில் பற்றியுள்ள தீ என் இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது'

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பொதுமக்கள் உள்ளத்தில் பற்றியுள்ள கோப நெருப்பு, தனது இயத்திலும் எரிந்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"உங்கள் உள்ளத்தில் பற்றியுள்ள தீ என் இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது'

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பொதுமக்கள் உள்ளத்தில் பற்றியுள்ள கோப நெருப்பு, தனது இயத்திலும் எரிந்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, பிகாரின் பரெளனி நகரில் பல்வேறு நலத் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
 காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பிகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாகூர் ஆகியோருக்கு எனது வணக்கத்தையும், அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இருவரையும் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து உங்கள் உள்ளத்தில் பற்றியுள்ள கோபத் தீ, எனது இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என்று பலத்த கரவொலிக்கிடையே பிரதமர் மோடி தெரிவித்தார்.
 அதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் பேசிய மோடி, ரூ.33,000 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.
 அந்த திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனக் கூறிய அவர், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் சமூதாயத்தில் பின்தங்கியவர்களின் மேம்பாடு ஆகிய இரண்டு கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது என்றார்.
 இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
 மத்தியில் மிகவும் வலிமையான, உடனடி முடிவுகளை எடுக்கும் திறன் படைத்த அரசை நீங்கள் தேர்ந்தெடுத்ததால்தான் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவது சாத்தியமாகியுள்ளது.
 ஏழை விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டம் அவர்களது வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
 ஏழ்மை நிலையிலுள்ள பொது வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அது பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை பாதிக்காது என்று மோடி கூறினார்.
 இந்த நிகழ்ச்சியில் பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பரெளனி பகுதியை தொழில் மண்டலமாக்கும் பிகாரின் முதல் முதல்வரான ஸ்ரீகிருஷ்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
 இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதீஷ் குமார் தவிர, மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன், மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ராம் விலாஸ் பாஸ்வான், ராம் கிருபால் யாதவ், கிரிராஜ் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com