மோடி இருப்பதால் பாஜகவுக்கு அறிவுரை தேவையில்லை: ப.சிதம்பரம்

"பிரதமர் நரேந்திர மோடி இருப்பதால், பாஜகவுக்கு அறிவுரை கூற யாரும் தேவையில்லை' என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மோடி இருப்பதால் பாஜகவுக்கு அறிவுரை தேவையில்லை: ப.சிதம்பரம்

"பிரதமர் நரேந்திர மோடி இருப்பதால், பாஜகவுக்கு அறிவுரை கூற யாரும் தேவையில்லை' என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு "தேசிய பாதுகாப்பு திட்டம்' ஒன்றை காங்கிரஸ் தயாரித்து வருகிறது. இந்தத் திட்டத்தை தயாரிக்கும் குழுவின் பல்வேறு துறை வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவுக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி டி.எஸ்.ஹூடா, கடந்த 2016-ஆம் ஆண்டு 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்த "துல்லியத் தாக்குதல்' நடவடிக்கையை திட்டமிட்டு நடத்தியவர் ஆவார்.
இந்நிலையில், "இந்த தேசத்தை அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தேசப் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை விமர்சித்திருந்தார்.
அவருக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் சனிக்கிழமை பதிலடி கொடுத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
தேசப் பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக, முன்னாள் ராணுவ அதிகாரி டி.எஸ்.ஹூடாவிடம் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கேட்டதை ஜேட்லி விமர்சித்துள்ளார். அத்துடன், பிரதமர் மோடி இருப்பதால், பாஜகவுக்கு எந்த அறிவுரையும் தேவையில்லை என்றும் ஜேட்லி கூறியிருக்க வேண்டும்.
மோடி இருப்பதால், ரகுராம் ராஜன் போன்றவர்கள் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருக்க வேண்டியதில்லை. மோடி இருப்பதால், திட்டக் குழுவும் தேவையில்லை; தேசிய புள்ளியியல் ஆணையமும் தேவையில்லை. 
அதுமட்டுமன்றி, மோடி இருப்பதால், மத்திய அமைச்சரவையும் தேவையில்லை.
மேலும், "காஷ்மீர் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கூறிய மேகாலய ஆளுநர் ததாகத ராய்க்கு எதிராக, மோடி எடுக்கப்போகும் நடவடிக்கையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com