மாநிலங்களவை அமர்வு நீட்டிப்பு: எதிர்க்கட்சிகள் தர்னா

அவையில் உறுப்பினர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் மாநிலங்களவைக் கூட்டத் தொடர் அமர்வை ஒரு நாள்
மாநிலங்களவை கூட்டத் தொடர் ஒருநாள் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தர்னாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள்.
மாநிலங்களவை கூட்டத் தொடர் ஒருநாள் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தர்னாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள்.


அவையில் உறுப்பினர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் மாநிலங்களவைக் கூட்டத் தொடர் அமர்வை ஒரு நாள் நீட்டித்ததாகக் கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தர்னாவில் ஈடுபட்டனர். இதில் அதிமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை.
குளிர்காலக் கூட்டத் தொடரில் மாநிலங்களவை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தின் போது, அவை அமர்வு ஒரு நாள் நீட்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக அவையில் அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மாலையில் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியாக புதன்கிழமை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்து, அவையில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன் பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்பகுதியில் உள்ள காந்தி சிலை முன் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்நிகழ்வில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், அவையை நீட்டிப்பதாக இருந்தால் இது தொடர்பாக முதலில் அவையில் தெரிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகே இந்த நேரத்தில் அவை கூடுகிறது என்கிற அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால், அதுபோன்று செய்யவில்லை. இது நியாயமற்றதாகும்' என்றார். 
டி.ராஜா எம்.பி. கூறுகையில், எக்கட்சியுடன் கலந்து ஆலோசிக்காமல் அவையை ஒரு நாள் நீட்டிக்கும் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது. இது சரியல்ல' என்றார்.
டி.கே. ரங்கராஜன் எம்பி கூறுகையில், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மாநிலங்களவைக் கூட்டத்தை ஒரு நாள் நீட்டித்திருப்பது சரியல்ல. அலுவல் ஆய்வு கூட்டத்தில்கூட அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத் தொடர் தேதியை சில நாள்களுக்கு முன்பே கூட்டலாம் என்ற யோசனையை முன்வைத்தோம். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவையை புதன்கிழமை காலை 11 மணி வரை தள்ளிவைப்பதாக அவைத் துணைத் தலைவர் அவையில் தெரிவித்தார். அவையைத் தள்ளிவைக்க அரசுக்கு உரிமை இருக்கலாம். ஆனால், அவைக்கு தெரிவிப்பதும் அவசியமாகும். இந்நடவடிக்கையானது கண்டிக்கதக்க ஒன்று' என்றார். 
இதனிடையே, தர்னாவில் பங்கேற்காத மாநிலங்களவை அதிமுக துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கூறுகையில், அவையின் ஒருமித்த கருத்தை அறிந்து கொள்ளாமல் திடீரென அவை அமர்வு புதன்கிழமை காலை 11 மணிக்கு கூடும் என அறிவித்தது முறையல்ல. அடுத்த நாள் அவை கூடும் விஷயத்தை முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். காலையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்திலேயே அவை அமர்வை புதன்கிழமைக்கு நீட்டிக்கக் கூடாது என பல உறுப்பினர்களும் தெரிவித்தனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com