எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடும் கூட்டணி நாட்டு மக்களுக்கு எதிரானது: பிரதமர் நரேந்திர மோடி

எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடும் கூட்டணி நாட்டு மக்களுக்கு எதிரானது: பிரதமர் நரேந்திர மோடி

எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடும் கூட்டணி எனக்கெதிரானது மட்டுமல்ல; நாட்டு மக்களுக்கு எதிரானது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பேசினார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடும் கூட்டணி எனக்கெதிரானது மட்டுமல்ல; நாட்டு மக்களுக்கு எதிரானது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பேசினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஒருங்கிணைப்பில், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
யூனியன் பிரதேசமான தாத்ரா-நாகர் ஹவேலியின் தலைநகர் சில்வாசாவில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு ஒரேயொரு எம்எல்ஏ தான் இருக்கிறார். ஆனால் அவர்கள் (திரிணமூல் காங்கிரஸ்) இன்னும் பாஜகவைக் கண்டு அஞ்சுகின்றனர். நாடு முழுவதுமிருந்து எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். ஏனெனில் நாங்கள் உண்மையின் பாதையில் பயணிக்கிறோம்.  
எதிர்க்கட்சிகளின் உலகம் என்பது, அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகும். அவர்களின் கொள்கையில் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை கிடையாது. ஆனால், எனக்கு நாட்டு மக்களே குடும்பத்தினர். இந்தியாவின் வளர்ச்சியே எனது ஒரே நோக்கம். 
எதிர்க்கட்சிகள் கூட்டணி எனக்கெதிராக மட்டும் ஒன்று திரளவில்லை. அந்தக் கூட்டணி நாட்டு மக்களுக்கும் எதிரானது. எதிர்க்கட்சிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எத்தனை பெரிய கூட்டணிகள் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால், அவர்களால் மக்களின் மனங்களை வெல்ல இயலாது. 
பொது மக்களின் பணத்தை சிலர் கொள்ளையடிப்பதை நான் தடுத்து நிறுத்தினேன். ஊழலுக்கு எதிராக நான் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவர்கள் கோபமடைந்துள்ளனர். அந்த நபர்களே தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குகின்றனர். அந்தக் கூட்டணியில் இணையும் அனைவரும், அச்சத்தின் காரணமாகவே ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் அவர்களால் கர்ம வினையிலிருந்து தப்ப இயலாது. 
தற்போது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஒன்று திரளும் கட்சிகள் யாவும் ஒரு காலத்தில் காங்கிரûஸயே விமர்சித்தன. ஆனால் தற்போது தங்களது வாய்ப்புகளுக்காக அவை அந்தக் கட்சியுடனே சேருகின்றன. ஒரு கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சியில் பெரிதாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் திட்டங்களுக்கு அதன் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்தும், எந்தத் திட்டத்துக்கும் எனது பெயர் வைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவின் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில், பிற அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தலின்போது அங்கு கட்சித் தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர்.
ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயலில் ஈடுபடுபவர்களே, அதைப் பாதுகாப்பது தொடர்பாகப் பேசி வருகின்றனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com