மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: தில்லி போலீஸாரிடம் தேர்தல் ஆணையம் புகார்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று குற்றம்சாட்டிய சையது ஷுஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு


இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று குற்றம்சாட்டிய சையது ஷுஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல்துறையிடம் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. தவறான தகவல்களை பரப்பி, பொதுமக்களின் மனதில் ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின்னணு தொழில்நுட்ப நிபுணர் என்று கூறப்படும் சையது ஷுஜா, லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்கைப் மூலம் பேட்டியளித்தார். 
தனது முகத்தை மறைத்தபடி பேட்டியளித்த அவர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும்; 2014 மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.
அவரது பேட்டி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது; அவை பாதுகாப்பானவை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சையது ஷுஜாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி, தில்லி காவல்துறையின் துணை ஆணையர் மதுர் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் புகார் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இந்திய தண்டனை சட்டத்தின் 505 (1) (பி) பிரிவின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே வதந்தி, தவறான தகவல்களை பரப்புவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது.
இதுதொடர்பாக மதுர் வர்மா கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இசிஐஎல் ஊழியர் அல்ல: இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்தில் கடந்த 2009 முதல் 2014 வரை தாம் பணியாற்றியதாகவும், தனது குழுவைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டதால் இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும், தனது பேட்டியில் சையது ஷுஜா கூறியிருந்தார்.
ஆனால், அவர் தங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று இசிஐஎல் மறுப்பு தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு இசிஐஎல் அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில், இசிஐஎல் நிறுவனத்தின் ஊழியராக சையது ஷுஜா பணியாற்றவில்லை என்பது பதிவேட்டின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் எந்த விதத்திலும் அவருக்கு தொடர்பில்லை என்பதையும் உறுதி செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com