ஜிஎஸ்டி 12, 18 சதவீத வரி விகிதம் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்பு: அருண் ஜேட்லி

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் 12, 18 சதவீத வரி விகிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ஜிஎஸ்டி 12, 18 சதவீத வரி விகிதம் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்பு: அருண் ஜேட்லி


சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் 12, 18 சதவீத வரி விகிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
பல்வேறு விதமான வரி விதிப்புகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிக்கும், சரக்கு-சேவை வரி விதிப்பு முறை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பில், தற்போது 5, 12, 18, 28 ஆகிய நான்கு அடுக்குகளில் வரிகள் விதிக்கப்படுகின்றன.
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு திங்கள்கிழமையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து சில தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
ஆடம்பரம் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு மட்டும் தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பெரும்பாலான பொருள்களுக்கு 5, 12 மற்றும் 18 சதவீத வரிதான் விதிக்கப்படுகிறது. 
எதிர்காலத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கும்போது, 12 மற்றும் 18 சதவீத வரி விகிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்புள்ளது. அதன் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு அடுக்கு வரி மட்டுமே நடைமுறையில் இருக்கும். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 9 மாதங்களில் வசூலான சராசரி ஜிஎஸ்டி வருவாய், மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ. 89,700 கோடியாக இருந்தது. இதேபோல், 2018-19-ஆம் நிதியாண்டில், இந்த வருவாய் சராசரியாக 10 சதவீதம் அதிகரித்து,  சுமார் ரூ. 97,100 கோடியாக உள்ளது. 
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பு, ஜிஎஸ்டி விரி விதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளில் 20 மாநிலங்களின் வரி வருவாயைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகமாக வசூலாகியுள்ளது. எனவே, மாநிலங்களுக்கு இழப்பீடு தர வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார் அவர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, மத்திய நிதியமைச்சராக அருண் ஜேட்லி இருந்தார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. ஆனால், உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என்று ஜேட்லி கூறிவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com