ராஜிநாமா விவகாரம்: மேலும் 5 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

கர்நாடக சட்டப் பேரவைத் தலைவர், தங்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காதது தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
ராஜிநாமா விவகாரம்: மேலும் 5 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

கர்நாடக சட்டப் பேரவைத் தலைவர், தங்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காதது தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
 அரசியல் குழப்பம் நீடித்து வரும் கர்நாடகத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே தங்கள் ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரிடம் அளித்துவிட்டனர். அவர்களில் 10 பேர் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதில், "எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக கர்நாடகப் பேரவைத் தலைவரிடம் நாங்கள் கடிதம் அளித்துவிட்டோம். ஆனால், அவர் வேண்டுமென்றே அதனை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார்' என்று கூறப்பட்டிருந்தது.
 இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்எல்ஏக்கள் மீண்டும் ராஜிநாமா கடிதம் கொடுக்க வேண்டும். அதனைப் பரிசீலித்து பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் கூறியது. இது, தொடர்பாக பேரவைத் தலைவர் சார்பில் விளக்கம் அளித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் மற்றும் மஜதவைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்துள்ள ராஜிநாமா கடிதம் தொடர்பாக வரும் 16-ஆம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இப்போதைய நிலையே தொடர வேண்டுமென்று சட்டப் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 இந்த சூழ்நிலையில், பதவியை ராஜிநாமா செய்து கடிதம் அளித்த வேறு 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். அதில், தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏற்காமல் வேண்டுமென்றே பேரவைத் தலைவர் தாமதம் செய்வதாகக் கூறியிருந்தனர். ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் உள்ள வழக்கில் தங்கள் மனுவையும் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
 ஏற்கெனவே, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் மேலும் 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது ஆளும் கூட்டணியின் முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனந்த் சிங், கே.சுதாகர், என்.நாகராஜ், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகியோர் புதிதாக மனு தாக்கல் செய்த எம்எல்ஏக்கள் ஆவர்.
 224 பேர் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் உள்ளிட்ட 79 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மஜதவின் 37, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. ஆட்சி அமைந்ததில் இருந்தே அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தி காங்கிரஸ், மஜதவில் காணப்பட்டது. ஒரு சில எம்எல்ஏக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவிக்க தவறவில்லை. இதைச் சமாளிக்க அவ்வப்போது அமைச்சரவையில் அதிருப்தியாளர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டு வந்தது.
 சுயேச்சை எம்எல்ஏக்களான ஆர்.சங்கர், எச்.நாகேஷுக்கு அண்மையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜிநாமா செய்ததால், கூட்டணி அரசு ஆட்டம் கண்டது.
 மேலும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றதோடு, பாஜகவுக்கு ஆதரவளித்தனர். இந்தநிலையில், தங்களது அரசைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிக்கட்ட முயற்சியில் காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஈடுபட்டனர்.
 இதனிடையே, ராஜிநாமா செய்துள்ள 16 பேரில் 10 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது ஜூலை 16-ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய முதல்வர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடையத் தொடங்கின. எம்எல்ஏக்கள் கட்சித் தாவும் வாய்ப்பிருப்பதாக எல்லா அரசியல் கட்சிகளும் சந்தேகிப்பதால், அவரவர் கட்சியின் எம்எல்ஏக்களை நட்சத்திர விடுதி அல்லது கேளிக்கை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரு புறநகர் பகுதியில் எலஹங்காவில் உள்ள ராமடா கேளிக்கை விடுதியிலும்; மஜத எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் தேவனஹள்ளியில் உள்ள பிரெஸ்டீஜ் கோல்ஃப் ஷைர் கேளிக்கை விடுதியிலும்; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரு, யஷ்வந்த்பூரில் உள்ள தாஜ்விவான்டா நட்சத்திர விடுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 தொடர் முயற்சியில் காங்கிரஸ்
 ராஜிநாமா கடிதமளித்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
 பெங்களூரில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களைச் சமாதானப்படுத்தி, மீண்டும் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை காங்கிரஸ் தலைவர்கள் சனிக்கிழமை தொடங்கினார்கள். பெங்களூரில் உள்ள நாகராஜ் வீட்டுக்கு அதிகாலையிலேயே சென்றுவிட்ட அமைச்சர் டி.கே.சிவகுமார், அவரிடம் 5 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இவருடன் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், எம்எல்சி ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்டோரும் இருந்தனர். அவரது வீட்டில் இருந்து முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் காவிரி இல்லத்துக்கு நாகராஜை காங்கிரஸ் தலைவர்கள் அழைத்து வந்தனர். அங்கு நாகராஜுடன் சித்தராமையா 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
 மேலும், அதிருப்தி எம்எல்ஏ கே.சுதாகருடனும் சித்தராமையா தொலைபேசியில் பேசினார். அதேபோல, ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் ராமலிங்க ரெட்டி, ரோஷன்பெய்க், முனிரத்னா, ஆனந்த் சிங் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பா வலியுறுத்தல்
 கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி திங்கள்கிழமையன்றே (15-ஆம் தேதி) நம்பிக்கை வாக்குகோர வேண்டும் என்று மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோர தயாராக இருப்பதாக முதல்வர் குமாரசாமி ஏற்கெனவே கூறியுள்ளார். எனவே, அவர் திங்கள்கிழமையன்றே நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். அரசு மீது அதிருப்தியடைந்து, எல்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். உச்சநீதிமன்றத்துக்கு சென்ற பின்னர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தேவையில்லாதது.
 காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசின் அவலங்களால், மாநில மக்கள் வேதனையடைந்துள்ளனர். இந்த அரசு விரைவில் விலக வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஜூலை 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்குமென்று நம்பிக்கை உள்ளது' என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com