அருணாசலில் விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்: இந்திய விமானப்படை அறிவிப்பு

சீன எல்லை அருகே அருணாசலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சீன எல்லை அருகே அருணாசலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட்டில் இருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு 13 பேருடன் கடந்த 3-ஆம் தேதி சென்ற விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக  விமானம், மென்சுகுவா வனப்பகுதி மேலே பறந்தபோது காணாமல் போனது. இதையடுத்து அதை தேடும் பணியில் விமானப்படை, தரைப்படை, கடற்படை ஆகியன ஈடுபட்டன. சுமார் 8 நாள்கள் தேடலுக்குப் பிறகு, அந்த விமானத்தின் சேதமடைந்த  பாகம், சியாங் மற்றும் சியோமி மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள கட்டே கிராமம் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. இதையடுத்து விமான பாகங்களை மீட்கவும், விமானத்தில் பயணித்த 13 பேரை தேடுவதற்கும் 15 பேர் கொண்ட மீட்புக் குழுவை இந்திய விமானப்படை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது.
அந்த குழுவில் இடம்பெற்றிருந்த 8 பேர் மட்டும், விமானம் விபத்தில் சிக்கிய இடத்துக்கு வியாழக்கிழமை காலை சென்றனர். அப்போது விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் பயணித்த விங் கமாண்டர் ஜி.எம். சார்லஸ், படைப்பிரிவு தலைவர் ஹெச். வினோத், விமான லெப்டினென்ட்டுகள் எல்.ஆர். தாபா, எம்.கே. கார்க், ஆஷிஷ் தன்வார், சுமித் மொகந்தி, வாரண்ட் அதிகாரி கே.கே. மிஸ்ரா, சார்ஜண்ட் அனுப் குமார், கார்பொரல் ஷெரின், வழிநடத்துதல் அதிகாரி எஸ்.கே. சிங், பங்கஜ், விமானப்படை வீரர்கள் ராஜேஷ் குமார், புதாலி ஆகியோர் உயிரிழந்து விட்டனர்.
விபத்தில் தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு இந்திய விமானப்படை தனது வணக்கத்தை செலுத்துகிறது. விபத்தில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்த இக்கட்டான தருணத்தில் தனது ஆதரவை இந்திய விமானப்படை தெரிவித்துக் கொள்கிறது என்றார் அந்த அதிகாரி.
இதே பகுதியில் 2ஆவது விபத்து: கடந்த 2009ஆம் ஆண்டில் இதே பகுதியில் ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் காணாமல் போனது. அப்போதும் அந்த விமானத்தில் 13 பேர் பயணித்தனர். பின்னர் நடைபெற்ற நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்த விமானம் விபத்துக்குள்ளானதும், அதிலிருந்த 13 பேர் உயிரிழந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய ஏஎன்-32 ரக விமானம், ரஷியத் தயாரிப்பு ஆகும். அந்த ரக விமானங்களை, இந்திய விமானப்படை தனது போக்குவரத்துக்கு அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com