சூரத் தீ விபத்து: குஜராத் அரசிடம் விசாரணை அறிக்கையை கோரியது உயர்நீதிமன்றம்

குஜராத் மாநிலம், சூரத்தில் வர்த்தக வளாகம் ஒன்றில் செயல்பட்டு வந்த பயிற்சி மையத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்த தீ விபத்து தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசிடம்


குஜராத் மாநிலம், சூரத்தில் வர்த்தக வளாகம் ஒன்றில் செயல்பட்டு வந்த பயிற்சி மையத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்த தீ விபத்து தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசிடம் குஜராத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. 
அந்த வழக்கை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி எஸ்.ஹெச். வோரா மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 
வழக்கு தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை ஜூலை 24-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு குஜராத் அரசுக்கு அவர் அறிவுறுத்தினார். 
மேலும், மனுதாரர் சிஐடி விசாரணை கோருவது தொடர்பாக பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 
முன்னதாக, சூரத் தீ விபத்தில் உயிரிழந்த 17 வயது சிறுமியின் தந்தை ஜெய்சுக் கஜேரா உயர்நீதிமன்றத்தில் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
சூரத் தீ விபத்து வழக்கை மாநில குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும். 
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை, அங்கீகரித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
அவ்வாறு சட்டவிரோதமாக உள்ள கட்டடங்களை அங்கீகரித்த சூரத் மாநகராட்சி அதிகாரிகளை காவல்துறை பாதுகாப்பதாகத் தெரிகிறது. எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளும் அமலில் இல்லாததும், சட்டவிரோத கட்டுமானங்களை அதிகாரிகள் அங்கீகரித்ததுமே இந்தத் தீ விபத்து ஏற்படக் காரணமாகும் என்று அந்த மனுவில் ஜெய்சுக் கஜேரா கூறியுள்ளார். 
அதனை விசாரித்த நீதிபதி, மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
சூரத்தின் சர்தானா பகுதியில் உள்ள 4 மாடி வர்த்தக வளாகத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி தீ விபத்து நேரிட்டது. இதில், அந்தக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த பயிற்சி மையத்தில் இருந்த 18 மாணவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 
வர்த்தக வளாகத்தின் 4-ஆவது மாடியில் பேனர்கள், டயர்கள் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் அதிகம் இருந்ததாலேயே தீ விரைவாகப் பரவியதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இந்த வழக்கில் இதுவரையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் வர்த்தக கட்டட உரிமையாளர், மாநகராட்சி அதிகாரிகள், சிறப்பு வகுப்புகள் நடத்திய ஆசிரியர் ஆகியோர் அடங்குவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com