மக்களவை தலைவராக பாஜகவின் ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வானார்: மோடி புகழாரம்

17வது மக்களவையின் தலைவராக பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வானார்.
மக்களவை தலைவராக பாஜகவின் ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வானார்: மோடி புகழாரம்


புது தில்லி: 17வது மக்களவையின் தலைவராக பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வானார்.

அவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்வது குறித்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது குரலெடுப்பின் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒருமனதாக ஓம் பிர்லா அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த மக்களவைக்கு தலைவராக ஓம் பிர்லாவை முன்மொழிகிறேன் என்று பிரதமர் கூற, இந்த தீர்மானத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிமொழிந்தார்.

ஓர் பிர்லா அவைத் தலைவராக தேர்வானதைத் தொடர்ந்து அவரை பிரதமர் அழைத்துச் சென்று அவைத்தலைவர் நாற்காலியில் அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பிறகு மக்களவைக் கூட்டத்தில் ஓர் பிர்லாவை பாராட்டி மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஓர் பிர்லா அவர்கள் ஒருமனதாக மக்களவையின் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநில மக்களுக்கு சேவையாற்றிய ஓர் பிர்லாவை பெரும்பாலான மக்களவை உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும்.

ஓர் பிர்லாவின் பணிச் சிறப்பு குறித்து நீண்ட காலமாக எனக்குத் தெரியும். பல ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஓம் பிர்லா, மாணவர் பருவத்தில் இருந்தே சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு, எந்த தொய்வும் இன்றி தொடர்ந்து சேவையாற்றி வருகிறார் என்று மோடி கூறினார்.

பதினேழாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. 

மக்களவை இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், மக்களவைத் தலைவராக ராஜஸ்தானின் கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதி எம்.பி.யான ஓம் பிர்லா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக 3 முறை இருந்துள்ள ஓம் பிர்லா, கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக், ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், தற்போது ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ்  கட்சியும் ஆதரவு தெரிவித்துவிட்டதால், அவர் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொய்த்த எதிர்பார்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவை கடந்த மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றது. 

அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலோருக்கு, புதிய அமைச்சரவையில் மீண்டும் இடமளிக்கப்பட்டது.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாஜக மூத்த தலைவர் மேனகா காந்திக்கு புதிய அமைச்சரவையில் பொறுப்பேதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மேனகா காந்தி மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும்படி, இரண்டு முறை எம்.பி.யான ஓம் பிர்லா மக்களவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக...
பொதுவாக, மக்களவைக்கு அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களவை அலுவல்களில் அனுபவம் வாய்ந்த எம்.பி.யையே தலைவர் பதவிக்குப் பரிந்துரை செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த 1996-ஆம் ஆண்டு இரண்டு முறை எம்.பி.யான ஜி.எம்.சி. பாலயோகி, மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஹெலிகாப்டர் விபத்தில் அவர் பலியானதையடுத்து, கடந்த 2002-ஆம் ஆண்டு, முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோகர் ஜோஷி மக்களவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 

அதேபோல் தற்போதும், இரண்டு முறை எம்.பி.யான ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவர் பதவிக்கு பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் 8 முறை எம்.பி.யான சுமித்ரா மகாஜன் மக்களவைத் தலைவராக இருந்தார். 

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com