ராகுல் பேச்சில் நெறிமுறை மீறல் இல்லை: தேர்தல் ஆணையம்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை அவதூறாக விமர்சித்ததாகக் கூறப்படும் புகாரில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நெறிமுறைகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ள
ராகுல் பேச்சில் நெறிமுறை மீறல் இல்லை: தேர்தல் ஆணையம்


பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை அவதூறாக விமர்சித்ததாகக் கூறப்படும் புகாரில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நெறிமுறைகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, அமித் ஷாவை கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று அழைத்தார். ராகுலின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது.
இதையடுத்து, ராகுல் காந்தியின் உரை அடங்கிய தொகுப்பை ஜபல்பூர் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்று, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதில், தேர்தல் நெறிமுறைகளை மீறும் விதமாக ராகுல் காந்தி பேசவில்லை என்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்தது என்றார் அந்த அதிகாரி.
முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்த விமர்சனத்துக்கு அமித் ஷா மறுப்பு தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களின் சட்ட அறிவு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
சோராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-இல் தன்னை விடுவித்து விட்டது என்றும் அவர் கூறியிருந்தார். அரசியல் உள்நோக்கம் காரணமாக, அந்த வழக்கில் தாம் சிக்க வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
மோடிக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று: இந்தியாவின் அணு ஆயுத வலிமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் நடத்தை நெறிமுறை மீறல் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானின் தங்களிடம்  அணு ஆயுதம் இருப்பதாகக் கூறியுள்ளது. அந்த அச்சுறுத்தலைக் கண்டு இந்தியா அஞ்சாது. இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களை தீபாவளிக்கு பயன்படுத்தவா வைத்திருக்கிறோம்? என்றார்.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. நாட்டின் ராணுவ வலிமை பற்றி தொடர்ந்து பேசி வரும் மோடிக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு சிறிது காலம் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. அந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், பார்மர் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த மோடியின் உரையை ஆய்வு செய்தது. இதையடுத்து, அவரது பேச்சில் நெறிமுறை எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com