வேட்பாளர் கட்சி மாறிய விவகாரம்: காங்கிரஸுக்கு மாயாவதி மீண்டும் மிரட்டல்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், கட்சி மாறிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
வேட்பாளர் கட்சி மாறிய விவகாரம்: காங்கிரஸுக்கு மாயாவதி மீண்டும் மிரட்டல்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், கட்சி மாறிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
 மத்தியப் பிரதேச மாநிலம், குணா மக்களவைத் தொகுதிக்கான பகுஜன் சமாஜ் வேட்பாளராக லோகேந்திர சிங் அறிவிக்கப்பட்டிருந்தார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். இதனிடையே, லோகேந்திர சிங் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். மேலும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தமது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
 இதையடுத்து, மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் அளித்துவரும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்யப் போவதாக மாயாவதி மிரட்டல் விடுத்திருந்தார்.
 இந்நிலையில், மொரேனா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோதும் காங்கிரஸுக்கு அவர் மீண்டும் மிரட்டல் விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:
 நேரம் வரும்போது காங்கிரஸ் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதேபோன்ற செயலில் ஈடுபட்ட காரணத்தினால்தான், முன்பு மத்தியில் ஆட்சியிலிருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசை கவிழ்த்தோம்.
 காங்கிரஸும், பாஜகவும் சாதிய வெறி கொண்ட கட்சிகள்; மேலும் முதலாளித்துவ கட்சிகள் ஆகும். இக்கட்சிகளுடன் பகுஜன் சமாஜ் ஒருபோதும் கூட்டணி அமைக்காது.
 மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சியமைக்க ஏதுவாக, மாநிலத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள், பிற சிறுபான்மையின சமூகத்தினரை, பொதுப் பிரிவில் இருக்கும் ஏழைகளுடன் ஒன்றிணைக்கும்படி கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தின்படி, பல ஆண்டுகளுக்கு முன்பு பகுஜன் சமாஜ் செயல்பட்டது. அதனால்தான், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜால் ஆட்சியமைக்க முடிந்தது.
 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால், வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை காங்கிரஸ் பூர்த்தி செய்யவில்லை என்றார் மாயாவதி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com