ரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
ரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை, ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, அந்த ரகசிய ஆவணங்கள் தொடர்பான ஆங்கில நாளிதழின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் செளரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கடந்த மாதம் 10-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்கள் அடிப்படையிலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.
குற்றவியல் விசாரணை: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கே.எம். ஜோசப், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. 
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முழுமையான ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு உண்மைகளை மத்திய அரசு தொடர்ந்து மறைக்கிறது. இந்த ஒப்பந்தத்துக்காக பிரான்ஸ் நாட்டுடன் பிரதமர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு, அந்தக் குழுவில் இருந்த 3 அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மூல மனுக்களை அடிப்படையாகக் கொண்டே தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோர முடியும். ஆனால், செய்தித்தாளில் வெளியான ரகசிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடைப்பட்ட அரசாங்கரீதியிலான ஒப்பந்தம். அதில், அணைகள் அல்லது பாலங்கள் கட்டுவது போன்ற சாதாரண விவகாரங்கள் இடம்பெறவில்லை; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றார்.
நீதிபதிகள் கேள்வி: இந்த விசாரணையின்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கான அம்சம் இடம்பெறாதது ஏன்? பிரான்ஸ் அரசின் உத்தரவாதம் விலக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விகளை நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கே.கே.வேணுகோபால், இதுபோன்ற தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. அமெரிக்கா, ரஷியா நாடுகளுடன் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் கூட அரசு உத்தரவாதம் விலக்கப்பட்டது. உலகில் எந்த நீதிமன்றமன்றமும், பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை இந்த ரீதியில் ஆய்வு செய்வதில்லை என்று பதிலளித்தார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர், மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com