பாலாகோட் தாக்குதலின்போது "மேகங்கள் உதவியதாக' மோடி பேச்சு: மெஹபூபா விமர்சனம்

பாலாகோட் தாக்குதலின்போது இந்திய விமானப் படைக்கு மேகங்கள் உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து வேதனை அளிப்பதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.
பாலாகோட் தாக்குதலின்போது "மேகங்கள் உதவியதாக' மோடி பேச்சு: மெஹபூபா விமர்சனம்

பாலாகோட் தாக்குதலின்போது இந்திய விமானப் படைக்கு மேகங்கள் உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து வேதனை அளிப்பதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.
 பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்ததை விவரித்தார். அப்போது, இந்திய விமானப் படையின் விமானங்கள் தாக்குதல் நடத்தச்சென்றபோது திடீரென்று மோசமான வானிலை நிலவியதாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, விமானப் படையினர் தாக்குதல் திட்டத்தை கைவிட்டு திரும்பி வர முயன்றபோது, முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்துங்கள், மேகங்கள் நமக்கு உதவியாக இருக்கும் என்று விமானப் படைக்கு தாம் அறிவுறுத்தியதாகவும் மோடி கூறியிருந்தார். அதன்படியே, விமானப் படையினர் பாலாகோட்டில் தாக்குதல் நடத்தினர் என்றும், பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து இந்திய விமானங்கள் தப்புவதற்கு மேகங்கள் உதவியாக இருந்தன என்றும் கூறியிருந்தார்.
 மோடியின் இந்தப் பேச்சு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவர், விமானப் படையின் அறிவுறுத்தலை மீறிச் செயல்பட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோடியின் கருத்தை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
 இந்நிலையில், மோடியின் பேச்சு வேதனை அளிப்பதாக மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
 பாலாகோட் தாக்குதலின்போது இலக்கைத் தாக்கி அழிப்பதில் விமானப் படை தோல்வி அடைந்ததில் எந்த ரகசியமும் இல்லை. இந்திய விமானப் படையின் அறிவுரையை மோடி மீறியதால்தான் இது நடந்ததா? அல்லது மோசமான வானிலையில் தாக்குதல் நடத்தியதால்தான் இது நடந்ததா? பாலாகோட் தாக்குதலின்போது மேகங்கள் உதவியதாக மோடி கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் பப்பு என்று அழைக்கப்படுகிறார். அதற்கு விளக்கம் கொடுங்கள்.
 பாலாகோட் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து எண்ணற்ற கேள்விகள் என் மனதில் உள்ளன. இந்தச் சூழலில், பிரதமரின் கருத்தை பாகிஸ்தான் ஊடகங்களும், பத்திரிகைகளும் விமர்சிக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது என்று அந்தப் பதிவில் மெஹபூபா முஃப்தி குறிப்பிட்டுள்ளார்.
 இதேபோல், மோடியின் பேச்சை விமர்சித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், "மேகங்களின் ஊடாக பாகிஸ்தான் ரேடார் கருவிகளால் கண்காணிக்க முடியாது; எனவே, இனி வரும் காலங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தும்போது, இந்த விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com