மோடியால் சீரழிந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை காங்கிரஸ் சீராக்கும்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் சீரழிந்துவிட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை
மோடியால் சீரழிந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை காங்கிரஸ் சீராக்கும்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் சீரழிந்துவிட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் (நியாய்) திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளிட்ட பாஜக அரசின் மோசமான முடிவுகளால் மக்களின் வாழ்க்கைத் தரம் சீரழிந்துவிட்டது. நாட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ள நியாய் திட்டத்தின் மூலம், நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத் தரம் சீராக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் மாதம் ரூ.6,000 என்ற விகிதத்தில் ஆண்டுக்கு 72,000 ரூபாய் கண்டிப்பாக வழங்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் உள்ள 20 சதவீத ஏழை, எளிய குடும்பங்கள் பயனடையும்.
நியாய் திட்டம் நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியாக அமையும். இதில் யாருடைய தலையீடும் இல்லாமல் ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.6,000 டெபாசிட் செய்யப்படும். இத்திட்டத்தின் பயனாளிகளில் 5 கோடி பேர் பெண்களாக இருப்பார்கள். குடும்பத் தலைவிகள் எந்த அளவுக்கு சிறப்பாக பணத்தைக் கையாளுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.
பிரதமர் மோடி எப்போதும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். விவசாயிகளுக்கான காப்பீடு என்ற பெயரில் சில தொழிலதிபர்கள் பயனடையும் வகையிலான திட்டத்தை மோடி செயல்படுத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக விவசாயிகள் சிறைக்குச் செல்லும் நிலை இனி ஏற்படாது என்றார்.
மோடியின் பொய்கள்: மோடியின் பொய்கள் (மோடி லைஸ்) என்ற புதிய வார்த்தை உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார். இந்நிலையில், ஒரு இணையதளம் மோடியின் பொய்களை வகை ரீதியாக பிரித்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மோடியின் பொய்கள் (மோடி லைஸ்) என்ற வார்த்தை உலக அளவில் பிரபலமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com