ஆந்திர பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றி: மே 30-இல் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்த மாநில முதல்வராக வரும் 30-ஆம் தேதி விஜயவாடாவில் பதவியேற்க
ஆந்திர பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றி: மே 30-இல் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்த மாநில முதல்வராக வரும் 30-ஆம் தேதி விஜயவாடாவில் பதவியேற்க உள்ளார்.
ஆந்திரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை சந்தித்திராத மாபெரும் தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. அக்கட்சியைத் தோற்கடித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, ஜெகன்மோகன்ரெட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள சாரதா பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமிகளைச் சந்தித்துப் பேசினார். அவரது ஆலோசனைப்படி, ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி விஜயவாடாவில் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பாக, கட்சி சார்பில் வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சனிக்கிழமை (மே 25) நடைபெற உள்ளது எனவும், அதில் ஜெகன்மோகன் ரெட்டி முறைப்படி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
ரோஜா வெற்றி: நகரி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரோஜா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி குறித்து அவர் கூறுகையில் "சந்திரபாபு நாயுடுவுக்குப் பெண்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர். நகரி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன். மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, ஆந்திரத்தை ஜெகன்மோகன் ரெட்டி சிறப்பாக வளர்ச்சி பெறச் செய்வார்' என்றார். 
முதல்வர் ராஜிநாமா: ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியைத் தழுவியதையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். 
"இது மக்களின் வெற்றி':  "தங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி, மக்களின் வெற்றி' என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைத் தோற்கடித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். முக்கியமாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களின் வெற்றி. இந்த வெற்றி முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். மக்களின் எதிர்பார்ப்பை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, ஜெகன்மோகன் ரெட்டியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  
ஆந்திரத்தை ஜெகன்மோகன் ரெட்டி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பின்னர், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com