உ.பி.: கள்ளச் சாராயம் குடித்த 12 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மருத்துவமனையில்


உத்தரப் பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அந்த மாநில கலால் துறை அமைச்சர் ஜெய்பிரகாஷ் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பாரபங்கி மாவட்டத்தின் ராம் நகர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினர் சிலர்  அங்குள்ள மதுக்கடையில் திங்கள்கிழமை இரவு சாராயம் குடித்துள்ளனர். சாராயம் குடித்த சில மணி நேரத்தில் அவர்களது உடல்நிலை மோசமாவதைக் கண்ட உறவினர்கள், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு முதல்வர் உத்தரவு..: இந்நிலையில், கள்ளச் சாராயம் விற்பனை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறும், குற்றவாளிகளை கண்டிபிடித்து கடுமையான தண்டனை வழங்குமாறும் கலால் துறை முதன்மை செயலர்களுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அயோத்தி ஆணையர் மற்றும் பாரபங்கி மாவட்ட கலால் துறை ஆணையர் தலைமையில் உயர் மட்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கள்ளச் சாராய உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்வதால், இந்த சம்பவத்துக்கு பின்னணியில் அரசியல் சதி ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம்..: மேலும், பணியில் அலட்சியமாக இருந்த காரணத்துக்காக, பாரபங்கி மாவட்ட கலால் துறை அதிகாரி, ஆய்வாளர், 3 கலால் துறை தலைமை காவலர்கள், கலால் துறை காவலர்கள் 5 பேர் மற்றும் 2 போலீஸார் ஆகியோரை யோகி ஆதித்யநாத் பணியிடை நீக்கம் செய்துள்ளார் என்று அமைச்சர் ஜெய்பிரகாஷ் சிங் தெரிவித்தார்.
இழப்பீடு..: இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com