கர்தார்பூர் திட்டத்தின் பின்னணியில் பாக், ராணுவத்தின் சதியா? மத்திய அரசு வட்டாரம் தகவல்

கர்தார்பூர் வழித்தட திட்டத்தின் மூலம் பஞ்சாபில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுதான் பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கர்தார்பூர் வழித்தட திட்டத்தின் மூலம் பஞ்சாபில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுதான் பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்துள்ளன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பர் 12-இல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் இருதரப்பிலும் முறைப்படி நவம்பர் 9-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

இதையடுத்து, இதுதொடர்பாக விடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. அதில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்கள் 3 பேருடைய புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது.

இந்நிலையில், கர்தார்பூர் திட்டத்துக்கு பாகிஸ்தான் முனைப்பு காட்டியதற்கான பின்னணி குறித்த தகவலை மத்திய அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தெரிவிக்கையில், "பாகிஸ்தான் ராணுவத்தின் மேற்பார்வையிலேயே கர்தார்பூர் திட்டம் சுறுசுறுப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பஞ்சாபில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதே அவர்களது திட்டமாகும். பஞ்சாபில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதன்மூலம் சீக்கியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்துவதுதான் அவர்களுடைய உண்மையான நோக்கம். ஆனால் கர்தார்பூர் திட்டத்தை பாகிஸ்தான் உள்நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்தால் இந்திய பாதுகாப்புப் படைகள் அதில் எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ளாது" என்றனர்.

இதையடுத்து, கர்தார்பூருக்கு பயணம் மேற்கொள்ள பஞ்சாப் எம்பி நவ்ஜோத் சிங் சித்துக்கு அனுமதி கிடைத்ததா என கேட்கப்பட்ட கேள்விக்கு, "சனிக்கிழமை கர்தார்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள அதிகாரப்பூர்வ குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எந்தவித அரசியல் ரீதியான அனுமதியும் தேவையில்லை" என்று மட்டுமே பதிலளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com