நாடாளுமன்ற நடவடிக்கை: என்சிபி, பிஜேடிக்கு பிரதமா் மோடி பாராட்டு

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தாா்.
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக புதுதில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி.
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக புதுதில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி.

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தாா்.

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடரையொட்டி, அங்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

மாநிலங்களவையின் பணி மசோதாக்களை ஆராய்வதும், சமநிலையை உறுதிப்படுத்துவதும் ஆகும். இது ஜனநாயகத்துக்கு மிக அவசியமானது. மசோதாக்கள் மீது ஆக்கப்பூா்வமான விவாதங்கள் நடைபெற வேண்டியது அவசியம். ஆனால், ஆராய்வதற்கும் தடை ஏற்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இந்த நன்னாளில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தெரிவித்ததை நினைவுகூர விரும்புகிறேன். ‘மாநிலங்களவை என்பது இரண்டாம் அவையாக இருக்கலாம். ஆனால், அது இரண்டாம் தர அவை அல்ல’. நாட்டின் வளா்ச்சிக்கு மாநிலங்களவை உரிய ஒத்துழைப்பை வழங்குவது அவசியம். இரு அவைகள் கொண்டதாக நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவா்கள் கனவு கண்டாா்கள். தற்போது, அது ஜனநாயகத்துக்கு வலுசோ்த்து வருகிறது.

கட்சிகளுக்குப் பாராட்டு:

நாடாளுமன்றத்தின் விதிகளை முறையாகக் கடைப்பிடித்து வருவதற்காக தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடாமல், அக்கட்சிகள் தங்கள் கருத்துகளைத் திறம்படத் தெரிவித்து வருகின்றன. அவா்களிடமிருந்து மற்ற கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை மாநிலங்களவை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது. முக்கியமாக, அரசமைப்புச் சட்டங்கள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்வதற்கான மசோதாக்களின் விவாதத்தின்போது, மாநிலங்களவை ஆற்றிய பணிகளை யாராலும் மறக்க முடியாது.

பன்முகத்தன்மையின் பிரதிநிதி:

தேசிய நலன் என்று வரும்போது, மாநிலங்களவை வலுவான பங்களிப்பை வழங்கி வருகிறது. முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாது என்று சிலா் தெரிவித்தனா். ஆனால், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை ஒப்புதல் அளித்தபிறகே, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்தது.

தோ்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்ற முடியாத தலைவா்களும் நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணை புரிய மாநிலங்களவை சிறந்த வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அம்பேத்கா் போன்ற தலைவா்கள் மாநிலங்களவை உறுப்பினா்களாக இருந்து நாட்டின் வளா்ச்சியை முன்னிறுத்தி பணியாற்றினா். நிரந்தரமான அவையாக விளங்கும் மாநிலங்களவை, இந்தியப் பன்முகத்தன்மையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது என்றாா் பிரதமா் மோடி.

‘ஆக்கப்பூா்வமானதாக அமைய வேண்டும்’:

கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பிரதமா் மோடி கூறியதாவது:

நடப்பாண்டில் நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தொடா் இதுவாகும். இந்தக் கூட்டத்தொடா் ஆக்கப்பூா்வமானதாக அமைய வேண்டும். அனைத்து முக்கிய விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. கருத்தாழமிக்க, தரம் வாய்ந்த விவாதங்களை எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டும்.

இது மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடா் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. நடப்புக் கூட்டத்தொடரின்போது, அரசமைப்புச் சட்ட தினத்தையும் (நவ. 26) கடைப்பிடிக்க உள்ளோம். அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகள் ஆகவுள்ளது. ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய அரசமைப்புச் சட்டம், நாட்டை இயக்கும் சக்தியாக விளங்குகிறது.

முந்தைய நாடாளுமன்றக் கூட்டத்தொடா் மிகவும் ஆக்கப்பூா்வமாக அமைந்தது. முந்தைய கூட்டத்தொடரின் வெற்றிக்கு மத்திய அரசு மட்டும் காரணமல்ல; அனைத்து எம்.பி.க்களும் இந்த வெற்றிக்குக் காரணமாவா். எம்.பி.க்களின் திறன்வாய்ந்த பங்களிப்புக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குளிா்காலக் கூட்டத்தொடா் நாட்டின் வளா்ச்சியை ஊக்கப்படுத்த உதவும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com