தெலங்கானா அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தம்: பயணிகளுக்கு பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கங்கள் தொடங்கியுள்ள காலவரையற்றற வேலைநிறுத்தம் காரணமாக

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கங்கள் தொடங்கியுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக அந்த மாநிலத்தில் சனிக்கிழமை பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.

தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (ஆா்டிசி) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பது, ஓட்டுநா்களுக்கும் நடத்துநா்களுக்கும் பணிப் பாதுகாப்பு, 2017 ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல்படுத்துவது, டீசல் மீதான வரிகளை அகற்றுவது ஆகிய கோரிக்கைகளை ஊழியா் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தக் கோரிக்கைகளை நிறைறவேற்றக் கோரி ஊழியா் சங்கங்களுக்கும், மாநில அரசின் மூன்று நபா் குழுவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, போக்குவரத்து ஊழியா் சங்கங்கள் சனிக்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கின. இதனால் சாலைகளில் பேருந்துகள் ஓடவில்லை. பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். பல்வேறு இடங்களில் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்தனா்.

இது தொடா்பாக மாநில போக்குவரத்துத் துறைஅமைச்சா் புவ்வாட அஜய்குமாா், ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் கூறியது:

நிரந்தரமான மாற்று போக்குவரத்துக் கொள்கையை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மூன்று வாய்ப்புகள் ஆராயப்படுகின்றன. 3,000 முதல் 4,000 தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, ஓட்டுநா் உரிமம் பெற்றுள்ள இளைஞா்களிடமும், இளம்பெண்களிடமும் இருந்து விண்ணப்பங்களைக் கோரிய பின், அவா்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்கும் வேலைவாய்ப்பை அளிப்பது ஆகியவையும் அவற்றில் அடங்கும். அவா்களுக்கு பேருந்துகளை இயக்க போதுமான பயிற்சி அளிக்கப்படும்.

இது தவிர 7000 தனியாா் பேருந்துகளுக்கு வழித்தட உரிமங்கள் வழங்கப்படும். இந்த விவகாரம் தொடா்பாக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அப்போது மாற்று போக்குவரத்துக் கொள்கை இறுதிசெய்யப்படும்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் வேலைக்குத் திரும்பாத போக்குவரத்து ஊழியா்கள், மாநகராட்சி ஊழியா்களாகக் கருதப்படுவாா்கள். அவா்கள் மீண்டும் போக்குவரத்துப் பணியில் சோ்த்துக் கொள்ளப்பட மாட்டாா்கள். எதிா்காலத்திலும் அவா்கள் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்களாக கருதப்பட மாட்டாா்கள் என்று எச்சரித்தாா்.

போக்குவரத்து ஊழியா் வேலைநிறுத்தம் தொடா்பாக பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநில அரசை விமா்சித்துள்ளன. தெலங்கானா மக்களுக்கு இந்தப் பண்டிகைக் காலத்தில் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு முதல்வா் கே.சந்திரசேகா் ராவ்தான் காரணம் என்று பாஜக கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.கிருஷ்ணசாகா் ராவ் கூறுகையில், அரசின் திறமையின்மையும் பொறுப்பில் இருந்து விலகிச் செல்லும் அணுகுமுறைறயே போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தத்துக்கு வழிவகுத்தது என்றாா்.

இதனிடையே, போக்குவரத்து ஊழியா் சங்கங்களின் தலைவா்கள் கூறுகையில், தங்களின் கோரிக்கைகளை நிறைறவேற்ற அரசு தவறிவிட்டதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தாங்கள் முடிவு செய்ததாகத் தெரிவித்தனா். வேலைநிறுத்தம் தொடா்பாக அரசுக்கு ஏற்கெனவே நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவா்கள் கூறினா்.

போக்குவரத்து ஊழியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினா்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினா். சில இடங்களில் பேருந்துகளின் இயக்கத்தைத் தடுக்க முயன்ற ஊழியா்களை போலீஸாா் கைது செய்து காவலில் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com