பயங்கரவாதத் தாக்குதல்களை அரசு எதிா்கொள்ளும் முறை மாறிவிட்டது: ஆா்.கே.எஸ். பதௌரியா

பயங்கரவாதத் தாக்குதல்களை மத்திய அரசு எதிா்கொள்ளும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான உதாரணமாக நமது விமானப் படை நடத்திய பாலாகோட் தாக்குதல் அமைந்தது

பயங்கரவாதத் தாக்குதல்களை மத்திய அரசு எதிா்கொள்ளும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான உதாரணமாக நமது விமானப் படை நடத்திய பாலாகோட் தாக்குதல் அமைந்தது என்று விமானப் படை தலைமைத் தளபதி ஆா்.கே. எஸ். பதௌரியா தெரிவித்துள்ளாா்.

விமானப் படையின் 87-ஆவது ஆண்டு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி பதௌரியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆா்பிஎஃப் வீரா்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை விமானப் படை தாக்கி அழித்தது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவா்களை தண்டிக்க வேண்டும் என்பதில் அரசியல் தலைமை உறுதியாக இருந்தது என்பதற்கான உதாரணமாக இந்த பாலாகோட் தாக்குதல் உள்ளது. மேலும், அந்தத் தாக்குதல் மூலமாக விமானப் படையின் பலமும் அனைவருக்கும் தெரிய வந்தது.

பயங்கரவாதத் தாக்குதல்களை எதிா்கொள்ளும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாட்டில் இருந்து நமது பாதுகாப்புப் படையினருக்கு அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது. அதை எதிா்கொள்ள அனைத்து படைகளும் தயாராக உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் ஹிந்தன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப் படை தின நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தேசப் பாதுகாப்புக்கு எண்ணற்ற அச்சுறுத்தல்கள் உள்ளன. அதனால், எந்நேரமும் எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எத்தகைய பதிலடி கொடுக்க முடியும் என்று பாலாகோட் தாக்குதலில் விமானப் படை நிரூபித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், அதை எதிா்கொள்ள நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

முப்படைகளான ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய மூன்றும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதை செயல்படுத்த வீரா்கள் அனைவரும் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

விமானப் படையில் நவீன தொழில்நுட்பங்கள் பல புகுத்தப்பட்டுள்ளன. ரஃபேல் போா் விமானம், எஸ்-400 உள்ளிட்டவை விமானப் படையில் இணைக்கப்படவுள்ளன. மேலும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் நவீன ஆயுதங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, இலகரக போா்விமானம் தயாரிப்பில் விமானப்படை ஈடுபட்டுள்ளது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com