பிகாரில் தொடரும் கன மழை

பிகாரின் சில மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பிகார் மாநிலம், பாட்னாவில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து  ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்ட மக்கள். நாள்: சனிக்கிழமை.
பிகார் மாநிலம், பாட்னாவில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து  ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்ட மக்கள். நாள்: சனிக்கிழமை.

பிகாரின் சில மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பிகாரின் சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. 
மேலும், அடுத்த சில தினங்களுக்கும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வெள்ள நிலைமை தொடர்பாக மாநில முதல்வர் நிதீஷ்குமார், பாட்னாவில் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். 
அப்போது நீரோட்டம் அதிகரித்துள்ள நதிகளில் இருந்து வெள்ள நீர் புகுந்துள்ள கிராமங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்குமாறும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் பிரத்யாய் அம்ரித் கூறுகையில், நேபாளத்தில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகள் அடுத்த மூன்று நாள்களில் 300 மில்லி மீட்டர் மழையைப் பெற வாய்ப்புள்ளதால், அதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் ஒட்டுமொத்த வடக்கு பிகாரும் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டார். இது குறித்து நிதீஷ்குமார் கவலை தெரிவித்தார்.
மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் பிப்ராசி பகுதிய்ல உள்ள ஒரு அணைக்கு அருகில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பிரத்யாய் அம்ரித் தெரிவித்தார்.
பிகாரில் கடந்த சில வாரங்களாக நீரோட்டம் அதிகரித்துள்ள கங்கை நதியையொட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் வெள்ள முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று அதிகாரிகளிடம் முதல்வர் நிதீஷ்குமார் வலியுறுத்தினார்.
இதனிடையே, பிகாரில் கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் 18 மீட்புக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்த மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்தில் தொடர்ச்சியாக சில தினங்கள் பெய்த கனமழை காரணமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியதும், அப்போது மழை, வெள்ள பாதிப்புக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com