தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் கல்யாண் சிங்: தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் கல்யாண் சிங்: தேர்தல் ஆணையம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசி, தேர்தல் நடத்தை விதிகளை ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் மீறிவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசி, தேர்தல் நடத்தை விதிகளை ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் மீறிவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு ரீதியிலான உயர் பதவியாக கருதப்படும் ஆளுநர் பதவியை கல்யாண் சிங் வகிக்கிறார். இந்நிலையில், அலிகாரில் உள்ள தனது வீட்டில் பாஜக தொண்டர்களிடையே கல்யாண் சிங் பேசுகையில், நாம் அனைவரும் பாஜக தொண்டர்கள்தான்; கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதே நமது விருப்பம். பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வர வேண்டும் என்பதும் நமது விருப்பமாகும் என்றார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாஜக நிர்வாகிகள், கல்யாண் சிங் வீட்டை முற்றுகையிட்டபோது அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் இவ்வாறு பேசினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்யாண் சிங்கின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருந்ததா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது.
இதில் தேர்தல் நடத்தை விதிகளை கல்யாண் சிங் மீறியிருப்பதாக தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு புகார் தெரிவித்து கடிதம் எழுத தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, 1990-களில் ஹிமாசலப் பிரதேச பிரதேச ஆளுநராக இருந்த குல்ஸார் அகமது, தேர்தலில் போட்டியிட்ட தமது மகனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தனது பதவியை குல்ஸார் அகமது ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com