அமித் ஷாவை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ போட்டி

மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ சி.ஜே. சாவ்தா போட்டியிடுகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ சி.ஜே. சாவ்தா போட்டியிடுகிறார்.
26 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக 4 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், காந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ சி.ஜே. சாவ்தா போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அமித் ஷாவை எதிர்த்து களமிறங்கும் இவர், காந்திநகர்(வடக்கு) தொகுதியின் எம்எல்ஏவாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால், இந்த முறை அமித் ஷாவுக்கு காந்திநகர் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று சாவ்தா தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்(கிழக்கு) மக்களவைத் தொகுதியில், படேல் இடஒதுக்கீடு போராட்டக் குழுவின் தலைவர் ஹார்திக் படேலுக்கு நெருங்கியவரான கீதா படேல் போட்டியிடுகிறார். ஹார்திக் படேல் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாம்நகர் தொகுதியில், முருபாய் கண்டோரியா போட்டியிடுகிறார். 
கடந்த 2015-ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஹார்திக் படேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால் ஜாம்நகர் தொகுதியில் ஹார்திக் படேலால் போட்டியிட முடியவில்லை.
இதுவரை 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநிலத்தில் மீதம் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com