இந்தியாவின் ஏ-சாட் சோதனை: நாசாவின் கருத்துக்கு அமெரிக்க அரசு மறுப்பு

இந்தியாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை (ஏ-சாட்) பரிசோதனையால், விண்வெளி குப்பைகளால் மாசடைந்து விட்டது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அரசு
இந்தியாவின் ஏ-சாட் சோதனை: நாசாவின் கருத்துக்கு அமெரிக்க அரசு மறுப்பு


இந்தியாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை (ஏ-சாட்) பரிசோதனையால், விண்வெளி குப்பைகளால் மாசடைந்து விட்டது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா கடந்த வாரம் மேற்கொண்டது. அப்போது,  புவியின் உள்வட்டப் பாதையில் இந்திய செயற்கைக்கோள்  ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 
இந்த ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால், விண்வெளி மாசடைந்து விட்டதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து நாசா விஞ்ஞானி பிரெடென்ஸ்டீன் செவ்வாய்க்கிழமை கூறியிருந்ததாவது:
இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை, மிகவும் அபாயகரமான செயல். இதனால் 400 மேற்பட்ட உடைந்த பாகங்கள் விண்வெளியில் குப்பையாக மிதந்து வருகின்றன. இதுவரை 60 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு மேல் சுற்றி வரும் 24 பாகங்களால் ஆபத்து மிக அதிகம்.
இந்தியாவின் சோதனைக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு 44 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் விண்வெளிப் பயணம் என்பது கூட எதிர்காலத்தில் ஆபத்தாக அமையும் என்றார் அவர்.
முன்னதாக, இந்த சோதனை புவியின் உள்வட்டச் சுற்றுப் பாதைக்குள் நடத்தப்பட்டதால், உடைந்த பாகங்கள் விண்வெளியில் சுற்றி வராமல் ஒருவாரத்துக்குள் பூமியில் விழுந்துவிடும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது. மேலும், இந்த சோதனையில் விண்வெளி தொடர்பான சர்வதேச விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாசாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ கூறியதாவது:
விண்வெளியில் குப்பைகள் சேர்வது, அமெரிக்காவுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். எனினும், செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனை குறித்து இந்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டது. ஏற்கெனவே கூறியதுபோல், இந்தியாவுடன் வலுவான நட்புறவை அமெரிக்கா கொண்டுள்ளது.
எனவே, விண்வெளி பாதுகாப்புக்காக கூட்டாகச் செயல்படுவது உள்பட அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடரும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com